வைஃபை ஆன் செய்ததும் அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய கருத்துகள் பல இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. Amit Shah- Edappadi… Video call conversation
“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (ஏப்ரல் 11) சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அதிமுகவும்-பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக 2026ல் தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தார். தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி தலைமையிலும் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித் ஷா கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது’ என்றும் அமித் ஷா அறிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமித் ஷா அவ்வபோது சற்று கோபத்தையும் வெளிப்படுத்தினார். தன்னுடைய இந்தி பேச்சை மொழிபெயர்ப்பு செய்த ஸ்ரீகாந்திடம் கூட சற்று கோபத்தைக் காட்டினார். அமித் ஷா அருகே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசவே இல்லை. Amit Shah- Edappadi… Video call conversation

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று தேநீர் விருந்து முடித்துவிட்டு அமித் ஷா சென்னையை விட்டு புறப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் நிகழ்ச்சி நிரல்கள் டெல்லியில் இருக்கும்போதே மிக அரிதாகத்தான் மாற்றத்துக்கு உட்பட்டதாக இருக்கும். மாநிலங்களுக்கு சுற்றுப் பயணமாக செல்லும்போது ஒவ்வொரு நிகழ்வுக்கும் எவ்வளவு நேரம் என்பது மிக துல்லியமாக திட்டமிடப்படும்.
ஆனால் சென்னையில் நேற்று அமித் ஷாவின் நிகழ்ச்சி நிரல் முழுதாக திட்டமிட்டப்படி அமையவில்லை. அதனால்தான் அமித் ஷா பத்திரிகையாளர் சந்திப்பில் அவ்வளவு இறுக்கமாக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.
ஏப்ரல் 11 காலை ஐடிசி ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிவிட்டு, அதன் பின் 12.30க்கு அவரோடு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்துவிட்டு அதன்பின் மற்ற தலைவர்களையும் சந்தித்து விட்டு… மாலை நேரத்தில் மயிலாப்பூர் சென்று ஆடிட்டர் குருமூர்த்தியை பார்ப்பதுதான் அமித் ஷாவின் ஷெட்யூல். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால்தான் அமித் ஷாவின் ஷெட்யூல்கள் எல்லாம் மாற்றப்பட்டன என்கிறார்கள்.

நேற்று காலை ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமிக்காக காத்திருந்தார் அமித் ஷா. அப்போது எடப்பாடி பழனிசாமி பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான விருப்ப மனு பெற கால அவகாசம் 4 மணியோடு முடிவடைகிற நிலையில், அதற்குப் பிறகே அமித் ஷாவை சந்திக்க சம்மதம் தெரிவித்தார்.
இதை நேரடியாக அமித் ஷாவிடம் சொல்லாமல், ‘அவர் நல்ல நேரம் பார்க்கிறார், பங்குனி உத்திர பூஜையில் இருக்கிறார்’ என்று சொல்லி அதற்குள் நாம் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். Amit Shah- Edappadi… Video call conversation
அதனால் பத்திரிகையாளர் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது. அமித் ஷா மயிலாப்பூரில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்றார். அங்கே அமித் ஷா, அண்ணாமலை, எல்.முருகன் மேலிட பொறுப்பாளர்கள் உடன் சென்றனர். அவர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார் அமித் ஷா.
அப்போது ’எடப்பாடி ஏன் இன்னும் வரவில்லை?’ என்று கேட்டார். அங்கேதான், ‘எடப்பாடி சில நிபந்தனைகளை விதிக்கிறார்’ என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி அமித் ஷாவிடம் எடுத்துச் சொன்னார்.
அதன் பின் அண்ணாமலை, முருகன் உள்ளிட்டோர் வெளியே அமர்ந்திருக்க அமித் ஷாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும் மட்டும் தனியாக அமர்ந்து ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வீடியோ கால் மூலம் அழைத்திருக்கிறார். அவருடன் அமித் ஷாவும் இருந்தார். எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை நேரில் சந்திப்பதற்கு முன்பே இந்த வீடியோ கால் மூலம் சந்தித்துவிட்டார்.

வீடியோ காலில், ஆடிட்டர் குருமூர்த்தியிடம் எடப்பாடி ஏற்கனவே தான் வைத்த நிபந்தனைகளை வைத்திருக்கிறார். அதாவது தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருக்கு இடமில்லை என்பதைச் சொல்லியிருக்கிறார். அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி ‘உங்க கட்சி விவகாரத்துல நாங்க தலையிட மாட்டோம். எங்களை நீங்க நம்பலாம்’ என்று சொல்ல அப்போது அமித் ஷாவும் ஆமோதித்திருக்கிறார். Amit Shah- Edappadi… Video call conversation
அப்போது ’நயினார் நாகேந்திரன் மட்டும்தான் மாநில தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க சொல்லியிருக்கோம். அவர் மட்டும்தான் நாமினேஷன் போடுவார். அதனால உங்களுக்கு இணக்கமான தலைவர்தான் வரப்போறாரு…’ என்று ஆடிட்டர் சிரிக்க அமித் ஷாவும் சிரித்திருக்கிறார்.
இந்த வீடியோ கால் உரையாடலுக்குப் பிறகு எடப்பாடி தன் வீட்டில் முக்கிய தலைவர்களான கே.பி. முனுசாமி, வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோரோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அமித் ஷா ரொம்ப ரெக்யுஸ்டா பேசுறாரு… நம்ம கட்சி விஷயத்துல தலையிட மாட்டோம்னு சொல்லிட்டாரு. மாநிலத்துல அதிமுக தலைமையிலதான் கூட்டணினும் சொல்லிட்டாரு. ஆனாலும் நயினார் ஒரு மனதா தேர்ந்தெடுக்கப்படும் வரை நாம வெயிட் பண்ணுவோம்’ என்று சொன்ன எடப்பாடி… 4 மணிக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்து, 4.36 மணிக்கு அமித் ஷா ட்விட் போட்ட பின்பே தனது வீட்டில் இருந்து ஹோட்டலுக்குப் புறப்பட்டார்.

எடப்பாடி இப்படி கறாராக காத்திருந்தது பாஜக தலைவர்கள் பலருக்கும் சற்று அயர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அமித் ஷாவுக்கு சற்று கோபம் கூட வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விஷயத்தைக் கையாண்டிருக்கிறார் அமித் ஷா. Amit Shah- Edappadi… Video call conversation
அந்த கோபத்தைத்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளர் மீதே சற்று வெளிப்படுத்திவிட்டார் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.