பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணைய உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக காங்கிரஸின் அடையாளமாக விளங்கியவர் அம்ரீந்தர் சிங். பஞ்சாப்பில் முதல்வராய் இருந்த அம்ரீந்தர் சிங்கிற்கும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல்போக்கு நிலவியது.
இந்த மோதல் போக்கின் உச்சமாக தனது முதல்வர் பதவியையே அமரீந்தர் சிங் கடந்த ஆண்டு (2021) ராஜினாமா செய்தார். இதன்பின்னர், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அக்கட்சியிலிருந்தும் விலகினார். பின்னர் அவர், ’பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்ரீந்தர் சிங், “பாஜகவில் இணைய மாட்டேன்” என தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், கடந்த பிப்ரவரி (2022) மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், அவர் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் ஓர் இடத்தில்கூட அக்கூட்டணி வெற்றி பெறவில்லை. இதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸை பாஜகவுடன் இணைத்துவிட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அம்ரீந்தர் சிங்கிற்கு ஆலோசனை கூறினர்.

இதற்குக் காரணம், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தனர்.
அவர்களில் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகரும் ஒருவர். இதைவைத்தே பாஜகவுடன் இணைப்பதற்கு ஆலோசனை கூறினர்.
இந்த நிலையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்காக அம்ரீந்தர் சிங் கடந்த ஜூன் மாதம் லண்டன் சென்றிருந்தார். அப்போது அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை பாஜகவுடன் இணைப்பது குறித்து மூத்த நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.
தமக்கு அறுவைச்சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியதும் அதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதை, பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹர்ஜித் கிரேவாலும் அப்போதே உறுதிப்படுத்தியிருந்தார். தற்போது லண்டனில் இருக்கும் அம்ரீந்தர் சிங், அறுவைச்சிகிச்சை முடிந்து குணமடைந்து வருகிறார்.
இந்த நிலையில்தான், அம்ரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையவுள்ளதாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியாவால் இன்று (செப்டம்பர் 16) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”அம்ரீந்தர் சிங் வரும் செப்டம்பர் 19ம் தேதி பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்பு அக்கட்சியில் இணையவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது கட்சியையும் அம்ரீந்தர் சிங் பாஜகவுடன் இணைக்கவுள்ளார். அம்ரீந்தருடன் அவரது மகன் ரன் இந்தர் சிங், மகள் ஜெய் இந்தர் கவுர், பேரன் நிர்வான் சிங் ஆகியோரும் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், அம்ரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், காங்கிரஸின் எம்.பியாகவே (பாட்டியாலா தொகுதி) இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
தலைமை செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்:பாஜகவுக்கு செக் வைத்த கே.சி.ஆர்.
