பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு ஏற்பட்ட அரிய வகை முக பக்கவாத நோய் இன்னும் குணமாகவில்லை. இதனையடுத்து அவர் அடுத்தமாதம் இந்தியாவில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி அதிகாரப்பூர்வாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனடா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். இளம் வயதிலேயே யூடியூப் மூலம் தனது பாப் பாடல்களை வெளியிட்டு இசையுலகின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் பாடிய பிரபலமான பேபி பாடல் இந்தியா உட்பட உலகெங்கிலும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளிலும் இசை கச்சேரிகள் நடத்தி வந்தார். அவருக்கு ஏராளமான இளம்பெண்கள் ரசிகைகளாக இருந்துவருகிறார்கள்.
அரிய வகை நோயால் பாதிப்பு!
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஜஸ்டின் பீபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நான் அரிய வகை முக பக்கவாத ’ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
என்னுடைய ஒரு கண்ணை சிமிட்ட முடியவில்லை. அதேபோல் ஒரு பக்கத்தில் என்னால் சிரிக்க முடியவில்லை. ஒரு பக்க மூக்கின் துவாரமும் அசைக்க முடியாது.

என்னுடைய முகத்தின் ஒரு பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், என்னுடைய உலக இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர்.
ஆனால், உடல் அளவில் என்னால் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாத நிலை உள்ள போது என்ன செய்ய முடியும்?’’ என்று ஜஸ்டின் பீபர் உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இசை நிகழ்ச்சி ரத்து!
இந்நிலையில் தற்போது வரை அவரது உடல்நிலை சரியாகாத காரணத்தால் அவர் அடுத்தமாதம் இந்தியாவில் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்த BookMyShow நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “ அக்டோபர் 18ம் தேதி அன்று டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த ‘ஜஸ்டின் பீபர் ஜஸ்டிஸ் வேர்ல்ட் டூர் – இந்தியா’ என்ற நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாடகர் ஜஸ்டின் பீபர் உடல்நலகுறைவு காரணமாக துரதிர்ஷ்டவசமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதற்கு வருத்தம் தெரிவிக்கின்றோம்.
இந்தியா மட்டுமின்றி சிலி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, பஹ்ரைன் உள்ளிட்ட இடங்களில் அவர் பங்கேற்க இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும் இசைநிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் தொகை விரைவில் திருப்பி அளிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.
கடைசியாக ஜஸ்டின் பீபர் கடந்த 2017ம் ஆண்டில் மும்பையில் இசைநிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அவரது இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா