உஷார் மக்களே! சென்னையை ‘வறுத்தெடுக்க’ போகும் 104 டிகிரி வெயில்- முன்னெச்சரிக்கைகள் என்ன?

Published On:

| By Mathi

Heatwave Chennai

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனல் காற்றுடன் கூடிய கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் என்று ”தமிழ்நாடு வெதர்மேன்” பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

மேலும் மே மாதம் தொடக்கத்தில் வட தமிழகத்தின் சில பகுதிகள், குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகள், 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையைத் தாண்டும்”என சமூக வலைதளப் பக்கங்களில் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

“இந்த அதீத வெப்பத்தின் தாக்கம் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் மிகக் கடுமையாக இருக்கும்; ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகமாக இருக்கும்” என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வேலூர் போன்ற உள் மாவட்டங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் பெய்ய வேண்டிய கோடை இடி மின்னல் மழை (Thunderstorms) பெய்யாததே இந்த அசாதாரண வெப்பநிலைக்கு முக்கிய காரணம் என்றும் பிரதீப் ஜான் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் 93 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையே 104 டிகிரி பாரன்ஹீட் போல உணரப்படுகிறது. ஏற்கெனவே கரூர், தர்மபுரி, சேலம் போன்ற தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சென்னை நகரின் மையப்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரம் உள்ள பகுதிகளில் கடல் காற்று காரணமாக வெப்பம் சற்று குறையலாம் என்றாலும், புறநகர்ப் பகுதிகளில் அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு வழிமுறைகள்

  • வெப்ப அலை வீசும் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  • அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share