தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், திரைத்துறை மட்டுமன்றி ரேசிங் பந்தயத்திலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
உலக அளவில் நடைபெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், சமீபத்தில் ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற சொந்தப் பந்தய அணியை உருவாக்கி, பல்வேறு சர்வதேசத் தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் அஜித்தின் அணி பங்கேற்றது. இந்தப் போட்டியின் போது அஜித் இயக்கிய வெள்ளை மற்றும் சிவப்பு நிறக் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. போட்டியில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார், திடீரென ஒரு வளைவில் திரும்பிய போது மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் சக்கரங்கள் செயலிழந்தன; முன் பகுதியும் சேதமடைந்தது. அதே சமயம் காரில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களால் எவ்விதக் காயமும் இன்றி அஜித் குமார் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
இந்தக் கார் விபத்தினால் அஜித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
முன்னதாக இத்தாலி, ஸ்பெயின், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் நடந்த கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கேற்ற அஜித் குமார், பயிற்சி மற்றும் பந்தயங்களின் போது விபத்துகளில் சிக்கியுள்ளார். அதில் சில விபத்துகளில் லேசான காயங்களுடன் தப்பினார்.
நடிகர் அஜித் குமார் கடைசியாக நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது நடந்துள்ள இந்த விபத்து அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
