பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

Published On:

| By Pandeeswari Gurusamy

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இன்று ( ஆகஸ்ட் 21) உடல் நலக்குறைவால் காலமானார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்பு காரணமாகக் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சௌகார் ஜானகி தனது 94 வயதில் காலமானார்.

ADVERTISEMENT

கடந்த 1950-ஆம் ஆண்டு வெளியான ‘சாவுகாரு’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் சௌகார் ஜானகி. சங்கரமஞ்சி ஜானகி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சௌகார் ஜானகி என்று திரைஉலகினராலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.

என். டி. ராமராவ், சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர்., ஜெமினி கணேசன், ராஜ்குமார், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கடந்த 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துச் சாதனை படைத்தவர்.
இவர் தமிழில் கடைசியாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார். இது அவரது 400-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவரது மறைவிற்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சௌகார் ஜானகியின் உடல் இன்று மாலை 5 மணி முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share