ஸ்ரீராம் திருவரங்கம்
சுந்தரத் தெலுங்கினில்
‘ஷாவுக்காரு’ என்றால்
வங்கியாளர் என்பதும்
பொருள் !
— ❖ —
நடிப்பை
அசலாக கொடுத்து
அன்பை
வட்டியாகப் பெற்று வாழ்ந்த
தென்னகத்தின்
உன்னத திரைமகாராணி
நமது சௌகாரம்மா!
நாயகி பிம்பங்களின்
நிழலுக்குள்
அவர் ஒதுங்கியதில்லை.
தன் நிழலைக் கூட
நாயகியாக்க வல்ல
நட்சத்திரம் அவர்!
— ❖ —
சிலர்
அவரைப் பார்த்து
நடிக்கக் கற்றுக் கொண்டார்கள்!
சிலர்
அவரைப் பார்த்து
வாழக் கற்றுக் கொண்டார்கள்!
— ❖ —
நல்ல படைப்பாளிகளும்
நடிகர் திலகம் – புரட்சித் தலைவரும்
மிடுக்கான
பாத்திரங்களுக்கு
அவரைத்தான் நாடினார்கள்
காரணம்,
அவரது ஆளுமை !
படப்பிடிப்பு இல்லாத
தருணங்களில்
அடுக்களை
பாத்திரங்களுக்கும்
அவரைப் பிடித்திருந்தது
காரணம்,
அவரது தாய்மை!
— ❖ —
தனது கண்ணியத்தை
அடுத்த
தலைமுறைக்கும்
கடத்திக் கொடுத்தவர்
நட்சத்திர நாயகி
சௌகார் அம்மா!
— ❖ —
சௌகார் ஜானகி
என்பதொரு
நடிகையின் பெயர் மட்டுமல்ல !
தென்னகத் திரையேடுகளில்
ஆழப் பதிந்துவிட்ட
கௌரவத்துக்கானதொரு
கையொப்பம் அது!
— ❖ —
பெண்மைக்கு அடையாளமாய்
தொண்ணூற்று நான்கில்
பூதலம் நீத்து –
புதிய பறவையாய்
புறப்பட்டு –
சுவனம் புகுந்த
பேரன்பே வடிவான
அம்மா ஷாவுக்காரு…
இதோ பிடி
எனது
தமிழ் வட்டி!
— ❖ —— ❖ —
