டாக்ஸிக் படப் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் பேசிக்கொண்டிருந்த போதே ராட்சத ஸ்பீக்கர் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்: எ பேரி டேல் பார் குரோன்-அப்ஸ்’. பிரபல இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வன்முறை காட்சிகள் நிறைந்த இப்படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம், வரும் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் ‘டாக்ஸிக்’ படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினரைக் காண்பதற்காக ஏராளமான மாணவர்களும் ரசிகர்களும் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் மேடையில் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ராட்சத ஸ்பீக்கர் பாக்ஸ் திடீரெனச் சரிந்து கீழே விழுந்தது. இதனால் மேடையில் பேசிக்கொண்டிருந்த யாஷ் பதற்றமடைந்தார்.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் 2 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது உடல் நிலை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் யாஷ் பேசிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்ததால், நிகழ்ச்சி இடத்தில் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
