காலை உணவுத் திட்டம் தொடக்கவிழாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிட்டு உணவு தட்டிலேயே முதலமைச்சர் கை கழுவியதால், அதிமுக பிரமுகர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்கி வைத்தார்.
மேலும், பள்ளி மாணவர்களோடு அமர்ந்து உணவு அருந்தியதோடு மாணவர்களுக்கு உணவையும் ஊட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் உணவை எடுத்து உண்ணாமல் சாப்பாடு தட்டில் இருக்கும் போதே கை கழுவிவிட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இந்நிலையில் அதிமுக மதுரை மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவுத் துணைச் செயலாளர் சிவா ஆனந்த் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு செயலைச் செய்துள்ளார்.
நேற்று தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் சிவ ஆனந்த் அங்குள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.
மேலும், அருகில் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்களுக்கு உணவை ஊட்டியும் விட்டார்.
இதன் பிறகு அவர் தொடர்ந்து தட்டிலிருந்த உணவு முழுவதையும் உண்டு முடித்துவிட்டு குழந்தைகளுக்கு ஆலோசனை கூறினார்.
”சாப்பிடும்போது எந்த காரணத்தைக் கொண்டும் தண்ணீர் இடையில் குடிக்கக் கூடாது. சாப்பாட்டைத் தட்டில் வைத்துக் கொண்டு கை கழுவக் கூடாது.
நிறைவாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு நாம் சாப்பிட்ட தட்டை நாமே கழுவி வைத்துவிட வேண்டும். அது நல்ல ஒழுக்கத்தையும் கொடுக்கும்.
உங்களுக்கு போதுமான அளவிற்குத் தான் சாப்பாடு வாங்கி சாப்பிட வேண்டும். அதிகமாகச் சாப்பாடு வாங்கி உணவிலேயே கை கழுவக் கூடாது.
அப்படி நீங்கள் செய்தால் இவர்களுக்குச் சாப்பாட்டின் அருமை தெரியவில்லை. விவசாயிகளின் கஷ்டம் தெரியாமல் இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று தவறாக நினைப்பார்கள். எனவே அப்படி யாரும் பண்ணக்கூடாது.
நாம் சாப்பிட்ட தட்டை நாம் தான் கழுவ வேண்டும், சுத்தமாக இருப்பது நல்லது. இனிமேல் தினமும் இப்படி செய்வீர்களா?” என்று மாணவர்களிடம் பேசினார்.
முதல்வரின் செயலுக்கு பதில் தரும் வகையிலேயே இது இருப்பதாக அதிமுகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
மோனிஷா
காலை உணவுத் திட்டம்: அரசியல் கடந்து பாராட்டும் தலைவர்கள்!
”எழுதக் கற்றுக் கொடுத்தவரே கலைஞர்தான்” -முதல்வரைச் சந்தித்த கே.பாக்யராஜ்
