சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 11) உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “குதிரை பேரம்” என்ற சொல்லை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இன்று 2026- 27 பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 3 ஆவது நாளாக சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, இந்த அரசின் குறிப்பிடத்தக்க சாதனை என்ன என்றால், நான் செல்கிறேன் என்று யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஒரு கட்சியில் எம்எல்ஏக்கள் வெற்றி பெறுகிறார்கள். உடனே ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் சேருகிறார்கள் இதை என்ன சொல்வது குதிரை பேரம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அவையில் ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறானது. அந்தச் சொல்லை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
2017-ஆம் ஆண்டு வரையிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியோடு எங்களுக்கு உடன்பாடு உண்டு. ஆனால், 2017-க்குப் பிறகு அமைந்த உங்கள் ஆட்சிக்கும் எங்களுக்கும் உடன்பாடு இல்லை. ஏனெனில், அது உண்மையான அதிமுக கிடையாது; அது அம்மாவின் அதிமுக கிடையாது.
குதிரைபேரம் என்று சொல்வதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
ஜெயலலிதா அவர்கள் அதிமுகவை வழிநடத்திய வரை நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) போன்றவை தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அதற்குப் பின் அமைந்த உங்கள் ஆட்சியில், தமிழக நலன்களுக்கு எதிராக டெல்லியிடம் சரணடைந்தீர்கள். அதனால்தான், எங்கள் முதலமைச்சர் அதனை ‘நீர்த்துப்போன அதிமுக’ என்று விமர்சித்தார்.
உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. தொண்டர்கள் உங்கள் தலைமையிலிருந்து முழுமையாக விலகியதால்தான், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் உண்மையான விசுவாசிகள் இன்றைக்குத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
ஒரு கட்சித் தலைமை மீது நம்பிக்கை இழக்கும் போது, முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியிலிருந்து விலகி வேறொரு மாற்றுக் கட்சியில் சேருவது அரசியல் சாசனப் படி இயல்பான உரிமையாகும்.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள முன்னாள் முதலமைச்சர் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பேசியபோதெல்லாம் நாங்கள் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. எனவே, அவையில் ‘குதிரை பேரம்’ போன்ற தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.” என்றார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் அமளி நிலவியது.
