தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 4 பேர், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க ஆட்சி அமைக்கக் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவளித்தன. இதனைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதன் பின்னர் சட்டமன்றத்தில் நடைபெற்ற த.வெ.க அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்தது. ஆனால், அதிமுகவில் எஸ்பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பில் இருந்த 25 எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைமையின் முடிவை மீறி, முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்தது.
திடீர் சந்திப்பு
இந்நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவளித்த சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரி பாஸ்கர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திலீபன் ஜெய் சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏக்கள் இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசினர்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன் சந்தித்து பேசினார்.
அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ஏமாற்றமா?
முதலமைச்சர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் எஸ்.பி. வேலுமணி தரப்பில் உள்ள சில முக்கிய அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.வெ.க அமைச்சரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த சூழலில், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசத் தொடங்கியிருப்பது, அவர்கள் மீண்டும் அதிமுக அதிகாரப்பூர்வ தலைமைக்கே திரும்புகிறார்களா என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்தத் திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
