அதிமுக தீர்ந்து போன கட்சியா? : முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

Published On:

| By Kavi

அதிமுகவை தீர்ந்து போன கட்சி என்று முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 6) தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

ADVERTISEMENT

அப்போது அவர் பேசுகையில்,  ” நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட என்னைச் சுமார் 98,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். 

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி தொகுதி என்ற பெருமையைத் தேடித் தந்த வாக்காளப் பெருமக்களின் பாதம் பணிந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அவர்,  ”தற்போதைய தவெக அரசு 108 இடங்களில் தான் வென்றுள்ளது. இது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு நடக்கும் ஆட்சி. ஒரு நாற்காலிக்கு நான்கு கால்கள் இருந்தால் அதில் இரண்டு கால்கள் இரவல் கால்கள்.  அந்த இரண்டு கால்கள் நகரும்போது நாற்காலி தானாகச் சாயும். 

தேர்தல் நேரத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்று சொன்னார்கள், ஆனால் இன்று திமுக கூட்டணியில் வென்றவர்கள் தான் இவர்களது ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

ADVERTISEMENT

குதிரை பேரம் பேசி விலைபோய், விரலில் வைத்த மை கூட அழியுமுன் 4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சிக்குச் சென்று துரோகம் இழைத்துள்ளனர்.அவர்களை வரலாறு மன்னிக்காது. 

கட்சியில் சுகத்தை அனுபவித்துவிட்டுப் பலரும் மாற்று கட்சிக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், உண்மையான அதிமுக தொண்டன் ஒருவன் கூட வெளியில் செல்லவில்லை.

ராஜினாமா செய்யப்பட்ட 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வரும்போது அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டு மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டார். 

திருச்சி கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் விஜய், அதிமுக-வைத் “தீர்ந்து போன கட்சி” என்று விமர்சித்ததற்குப் பதிலடி கொடுத்தார் ஈபிஎஸ் .

”அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல, மக்களின் குறைகளைத் தீர்த்து வைத்த கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிய பெருமை அதிமுக-வுக்கு உண்டு. கல்வி, விவசாயம், மருத்துவத்தில் சாதனைகள் படைத்த கட்சி இது, ஆனால் நீங்கள் கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள், திரைப்படத்தில் நடித்துப் பெற்ற வெற்றியே தவிர மக்கள் சேவை செய்து பெற்ற வெற்றி அல்ல என்று  விமர்சித்தார். 

ராஜ்யசபா உறுப்பினர் அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளைக் கலந்தாலோசிக்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது என்றும், காங்கிரஸ் வேட்பாளரின் சமூக நீதி முற்போக்குக் கூட்டணி என்ற பெயருக்குக் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதால் தவெக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது, இந்த ஆட்சி நீடிக்காது என்றும் கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share