உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அதன் கட்டுமானத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என்றும் அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசியில் 880 கிமீ சார் தாம் திட்டத்தின் கீழ் சில்க்யாராவிலிருந்து பர்கோட் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அந்த சுரங்கப்பாதையின் நடுவே கடந்த 12ஆம் தேதி மணல் சரிந்ததில் சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
எனினும் 16 நாட்கள் ஆகியும், உள்ளே சிக்கியுள்ள 40 தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டாலும், அவர்கள் மீட்கப்படாததால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
சுப்பிரமணிய சுவாமி கேள்வி!
இந்தநிலையில், பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி இன்று (நவம்பர் 27) தனது எக்ஸ் பக்கத்தில், “உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது? அதன் பங்குதாரர்கள் யார்? பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் அதானி குழுமத்தின் நிறுவனமும் உள்ளதா? நான் கேட்கிறேன்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவினை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு எதிராக பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
This Uttarakhand tunnel was built by which private company? Who were its share holders when the collapse took place? Was one of them Adani Group? I am asking not implying.
— Subramanian Swamy (@Swamy39) November 27, 2023
அதானி குழுமம் விளக்கம்!
இந்த நிலையில், உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து தொடர்பாக அதானி குழுமம் இன்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “உத்தரகாண்டில் நிகழ்ந்த துரதிஷ்டவசமான சுரங்கப்பாதை விபத்து சம்பவத்தில் எங்களை இணைக்க ஒரு சிலர் மோசமான முயற்சிகள் மேற்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முயற்சியையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
அதானி குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சுரங்கப்பாதை கட்டுமானத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம். அதே போன்று சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்கள் குழுமத்திற்கு சொந்தமாக எந்த பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்” இவ்வாறு அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
தற்போது மீட்பு பணியின் நிலை!
உண்மையில், உத்தரகாசி சுரங்கப்பணிகளை ஹைதரபாத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் நவயுகா என்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் தான் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இடிபாடுகளுக்கு நடுவில் மீட்புக் குழாய்க்குள்ளே சிக்கி இருந்த ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் 2 நாள் போராட்டத்திற்கு பிறகு முழுமையாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தான் மனிதர்களைக் கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்க உள்ளது. மேலும் மலையின் உச்சியிலிருந்து செங்குத்தாக துளையிடும் பணியும் நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
துருவ நட்சத்திரம் டிசம்பர் 08 ஆம் தேதி ரிலீஸ்?
கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க போறேன்… திடீரென திருந்திய நிக்சன்?