ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், பெண் ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், மதுபோதையில் அவரது அரசு இல்லத்துக்குள் நுழைந்து அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டிய எம்எல்ஏ மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்தியன், பெண் ஆட்சியரிடமிருந்து தலைமைச் செயலாளர் எம்.சாய் குமாருக்கோ, காவல்துறைக்கோ எந்தப் புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, பெண் ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக மனுதாரருக்கு எப்படித் தெரியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.ஜெயக்குமார், பெண் ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்தார். அந்தப் புகாரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கேட்டபோது, அதன் நகல் தன்னிடம் இல்லை என்று வழக்கறிஞர் பதிலளித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உண்மைகளை மறைப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்குத் தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பது தெரியாதா என்று கேள்வி எழுப்பினார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாரைச் சுட்டிக்காட்டிய நீதிபதி
2021-ஆம் ஆண்டு அப்போதைய சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லைப் புகார் அளித்த சம்பவத்தையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே நேரடியாகப் புகார் அளித்தார். ஆனால், தற்போதைய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஆட்சியரின் புகார் எங்கே இருக்கிறது என்று நீதிபதி கேட்டார்.
இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, டிஜிபியிடம் அறிக்கை கேட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, தேசிய மகளிர் ஆணையம் செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நீதிமன்றம் அவ்வாறு செயல்பட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
எம்எல்ஏ உண்மையிலேயே ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதற்கான உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் உத்தரவு பிறப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
பெண் ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில், செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் மட்டும் போலீசார் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பெண் ஆட்சியரிடம் விளக்கம் பெற்று இன்று (நவம்பர் 24) நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
திடீர் திருப்பம்.. போலீசில் புகார் அளித்த ஆட்சியர்
இந்த நிலையில், நேற்று பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக முறையான புகார் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் புகாரில், எம்எல்ஏ தன்னிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் பெண் ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ அருண் விக்னேஷ் மீது போலீசார் புகாரைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று நீதிமன்றத்தில் பெண் ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளில் பிற்பகலில் அவர் நேரடியாகப் புகார் அளித்திருப்பது இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது. இந்த வழக்கு இன்று (நவம்பர் 24) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.









