ஆபாச மெசேஜ்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகார்- தவெக எம்எல்ஏ மீது உடனே வழக்குப் பதிவு செய்க.. மாணிக்கம் தாகூர் திடீர் கோரிக்கை!

By Mathi

|

Published on 24 Nov 2026, 7:35 AM

Kallakurichi TVK MLA Arul Congress

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 24) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, நவம்பர் 11-ந் தேதி அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்திருந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அருள் விக்னேஷ் பாவம். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல்முறை எம்எல்ஏ அவர். தனது செல்போனையும் சிசிடிவி காட்சிகளையும் சோதித்துப் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், வாட்ஸ்அப் தகவல்களை வைத்து ஊடக விசாரணை நடத்துவது நியாயமல்ல” என்று தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது.

இந்த நிலையில், பெண் ஆட்சியரே போலீசில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அருள் விக்னேஷ் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தற்போது வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே அருள் விக்னேஷுக்கு ஆதரவாகப் பேசிய மாணிக்கம் தாகூர், தற்போது அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel