மாற்றுத்திறனாளி சிறுமியை நெகிழ வைத்த நடிகை சிம்ரன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

ஒரு கையுடன் பிறந்த 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி நிஷாவுடன் இணைந்து நடனமாடி, அவரது நீண்ட நாள் கனவான சைக்கிளையும் பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை சிம்ரன்.

ஒரு கையுடன் பிறந்த சவாலைத் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் எதிர்கொண்டு வரும் சிறுமி நிஷா, நடனத்தின் மீது கொண்ட ஆர்வம் காட்டி வருகிறார் . அவரது நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தார். நடிகை சிம்ரனின் நடனங்களைத் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, அவர் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடித் தொடர்ந்து பயிற்சி செய்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

நிஷாவின் நடனக் காணொளிகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையைப் பலரிடம் கொண்டு சேர்த்த தன்னார்வலர் ஆஷிக் என்பவர், சிறுமி நிஷா குறித்தும் அவரது ஆசைகள் குறித்தும் நடிகை சிம்ரனின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்பதே நிஷாவின் நீண்ட நாள் கனவு என்பதையும் அவரிடம் தெரிவித்தார்.

இதையறிந்த நடிகை சிம்ரன், சிறுமி நிஷாவை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் போது, தான் நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்து வந்த சிம்ரனின் பாடல் வரிகளுக்கு அவருடனேயே இணைந்து நிஷா உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். பின்னர் நிஷாவின் கனவான புதிய சைக்கிளையும் அவருக்குப் பரிசாக வழங்கி நடிகை சிம்ரன் ஆச்சரியப்படுத்தினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, கல்வியின் முக்கியத்துவத்தைச் சிறுமிக்கு எடுத்துரைத்த சிம்ரன்,
“படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் உனது கனவுகளையும் தன்னம்பிக்கையோடு பின்தொடர வேண்டும்” என்று ஊக்கமளித்தார்.

மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரனின் இந்த நெகிழ்ச்சியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share