மாமன்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

actor soori maaman movie review

’விலங்கு’ வெப் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ். ஜி.வி.பிரகாஷை நாயகனாகக் கொண்டு ‘ப்ரூஸ்லீ’ தந்தவர். இவரது இயக்கத்தில் சூரி நடிக்கிறார் என்பதே ‘மாமன்’ மீது எதிர்பார்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது. ‘இது செண்டிமெண்ட் நிறைந்த குடும்பப் படமாக இருக்கும்’ என்பதும் அதன் பின்னிருந்தது.

ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லெட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பாபா பாஸ்கர், பாலசரவணன், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், ஜெயபிரகாஷ் உட்படப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

actor soori maaman movie review

இது ‘பீல்’குட் கதை!

அக்காவை உயிரென நினைக்கிற தம்பி. அப்படிப்பட்டவர் தனது சகோதரிக்கு ஒரு குழந்தை பிறந்தால் எப்படியெல்லாம் கொண்டாடுவார்? ஆனால், அது நிகழாமல் இருக்கிறது. இதனால், அக்கா புகுந்த வீட்டில் உள்ள சிலரிடம், உறவினர்களிடம் சில பல அவமானங்களை வாங்கிக்கொள்ள நேரிடுகிறது.

பத்தாண்டுகள் கழித்து, அந்த அக்கா கருவுறுகிறார். அதனை அந்த தம்பி எப்படிக் கொண்டாடுவார்? குழந்தை பிறந்தபிறகு அதனை எப்படியெல்லாம் சீராட்டி வளர்ப்பார்? இந்த விஷயங்களை முன்பாதியில் சொல்கிறது ‘மாமன்’. actor soori maaman movie review

இரண்டாம் பாதியில், அந்த குழந்தைக்கும் தந்தை, தாய் என்ற உறவுகள் உண்டுதானே என்கிறது. ஒரு மனைவிக்குத் தனது கணவனின் அன்பும் அருகாமையும் கிடைக்காமல் போவது சரியா என்று கேள்வி எழுப்புகிறது. கூடவே, அதீத பாசத்தால் விளைகிற அசம்பாவிதங்களை இன்றைய பெற்றோருக்குச் சொல்கிறது.

actor soori maaman movie review

இப்படிப் பல விஷயங்களைச் சொன்னாலும், படத்தின் மையமாகத் திகழ்வதென்னவோ ‘மாமன் – மருமகன்’ உறவுப் பிணைப்பு தான்.

தாய்மாமன் உறவு பற்றி பாசமலருக்கு முன் தொடங்கி கிழக்குச்சீமையிலே உட்படப் பல படங்கள் பேசியிருக்கின்றன. அவற்றில் அது ஒரு புள்ளியாக இருக்கும். அதையே சுற்றிச் சுற்றிக் கோலமிட்டிருக்கிறது ‘மாமன்’. அந்த வகையில் மட்டுமே இப்படம் வித்தியாசப்படுகிறது.

ஒரு ‘பீல்குட்’ அனுபவத்தைத் தர வேண்டுமென்ற வகையில், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கண்டுகளிக்கிற விதத்தில் உருவாக்கப்பட்டாலும், கதையின் அடிநாதமாக இருப்பதென்னவோ ‘கணவன் மனைவி’யின் தாம்பத்திய வாழ்வுதான்.

அதனைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிற இதர உறவுகளையும், அதில் கீறல்கள் விழுகிறபோது உருவாகிற வலி வேதனைகளையும் ‘செண்டிமெண்ட்’ பிழியப் பிழியச் சொன்ன விதத்தில் ரசிகர்களை ‘பீல்’ ஆக்குகிறது ‘மாமன்’.

நட்சத்திரப் பட்டாளம்!

நடிப்பைப் பொறுத்தவரை, திரை முழுக்கவே தலைகள் தான் எனும்படியாகப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் இருக்கிறது. actor soori maaman movie review

இந்தப் படத்தில் இன்பா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூரி. ரசிகர்களிடத்தில் அழுகையை வரவழைக்கிற காட்சிகளில் நடிப்பது எளிது. ஆனால், அப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கிறபோதும் அதனை நிகழ்த்துவதற்கு அசாத்திய திறமை வேண்டும். அது தனக்கிருக்கிறது என்று இப்படத்தில் சூரி நிரூபித்திருக்கிறார்.

இதில் அவரது சகோதரியாக வருகிறார் சுவாசிகா. ‘லப்பர் பந்து’வை விட ஒருபடி மேலாக இதில் ‘உணர்ச்சிகளை’ கொட்டுகிற பாத்திரம். அந்த மீட்டர் தெரிந்து தெறிக்க விட்டிருக்கிறார். மாடர்ன் பெண்ணாக, அவரது இயல்பான புகைப்படங்களைப் பார்த்தால் மட்டுமே, இப்படத்தில் ஒரு பாத்திரமாக அவர் மாறி நிற்பது பிடிபடும்.

actor soori maaman movie review

நாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமி. ‘ஏன் நான் டாக்டரை லவ் பண்ணக் கூடாதா? விட்டா, அதை தாங்க மாட்டாம சூசைடு பண்ணிக்குவாங்க போலிருக்கு’ என்பது போன்ற வசனங்களின் துணையோடு சூரியின் ஜோடியாக வந்து போயிருக்கிறார். காதல் காட்சிகளில் இருவரது ‘கெமிஸ்ட்ரி’யும் அபாரம்.

நாயகனின் சகோதரியாக வரும் சுவாசிகா தான் ரசிகர்களிடத்தில் பெயரைத் தட்டிக்கொண்டு போவார் என்று தெரிந்தபிறகும், இதில் அவருடன் போட்டி போடுகிற விதத்தில் ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருப்பது பாராட்டுக்குரியது.

இவர்களோடு சிங்கராயர் –  பவுனம்மாள் பாத்திரங்களில் ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் நடித்திருக்கின்றனர். ‘மெயின்’ கதையோடு இணைந்து வருகிற பாத்திரங்களாக இல்லாதபோதும், கிளைமேக்ஸ் திருப்பத்திற்காக அவை வந்து போகின்றன. இருவரும் வருகிற காட்சிகள் தொடக்கத்தில் சிரிக்க வைத்தாலும், இறுதியில் நம்மைக் கண்ணீர் மழையில் ஆழ்த்துகின்றன.

சுவாசிகாவின் கணவராக நடித்துள்ள பாபா பாஸ்கருக்கு இதில் முக்கியத்துவம் உண்டு; ஆனால், ‘இல்லை’ என்கிற மாதிரியான பாத்திர வார்ப்பு. அதனைப் புரிந்துகொண்டு, அவரும் தன் பங்கினைத் தந்திருக்கிறார். சிறுவன் பிரகீத் சிவன் சில காட்சிகளில் மட்டும் கவனம் ஈர்க்கிறார்.

இது போக ஜெயபிரகாஷ், பாலசரவணன், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர் உட்படப் பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அத்தனை பேர் முகங்களும் மனதில் பதியும்படியான பாத்திர வார்ப்பு அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் முக்கியமானதொரு காட்சியில் ‘கௌரவமாக’த் தலைகாட்டியிருக்கிறார் விமல். அப்பாத்திரத்தின் ‘பினிஷிங்’ சரிவரக் கையாளப்படவில்லை.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், கலை இயக்குனர் ஜி.துரைராஜ் கூட்டணியானது ஒவ்வொரு பிரேமும் பளிச்சென்று தெரிய மெனக்கெட்டிருக்கிறது. ’ரசிகர்கள் இந்த இடங்களில் எல்லாம் அழுவார்கள்’ என்பதைக் கணக்கில் கொண்டு, சில காட்சிகளை மிக மெதுவாக நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா. அதே நேரத்தில், கதை சீராகத் திரையில் விரிவதில் எந்தக் குறையும் நேர்ந்திடக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார்.

actor soori maaman movie review

இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப்புக்கு இது அறிமுகப் படம். ஆனால், இதற்கு முன்பே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மலையாளம், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை ‘ஹிட்’. அந்த வரிசையில் இடம்பெறுகிற அளவுக்கு இதிலும் ’கள்ளாலியே கள்ளாலியே’, ‘அழகே அகரமே’, ‘தெய்வமகனே’, ’கண்ணாலே பேசுமா’, ‘விழுதே’, ’வானம் கிழியுதே’ பாடல்களைத் தந்திருக்கிறார். என்ன, எல்லாமே ஏற்கனவே கேட்ட உணர்வைத் தருகின்றன.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, இரண்டாம் பாதியில் நாம் நெகிழ்ந்து உருகுகிற வகையில் கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிக்கு முக்கியத்துவம் தந்து இசைக்கருவிகளை மீட்டியிருப்பது அருமை. actor soori maaman movie review

இப்படத்தைச் சிறப்பான கமர்ஷியல் சினிமாவாக மாற்றுவதற்காக நடனம், சண்டைக்காட்சி, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்பைத் தந்திருக்கின்றனர். அவற்றைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து, ’மாமன் – மருமகன்’ உறவு குறித்த ஒரு ‘மெலோடிராமா’வை தந்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.

மெல்ல நகரும் திரைக்கதை முதல் மாமனுக்காகத் தங்களது பாசத்தைத் தியாகம் செய்கிற ‘அப்நார்மல்’ தாய் தந்தை பாத்திர வார்ப்பு வரை இப்படத்தில் குறை சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

மிக முக்கியமாக, தாய் மாமன் மற்றும் அத்தையின் இல்லற வாழ்வுக்கு அந்த மருமகன் தடையாக இருக்கிறார் என்பதைக் கதையின் மைய முடிச்சாகக் காட்டியபிறகும், அந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது திரைக்கதை.

போலவே, சுவாசிகா பாத்திரம் தன் குழந்தையின் மீதான அதீத பாசத்தால் தம்பி மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட மகிழ்வுத் தருணங்கள் மீதான தனது அக்கறையைப் புறந்தள்ளத் தயாராவது தெளிவுறத் திரையில் சொல்லப்படவில்லை.

ஜெயபிரகாஷ் உட்பட ஐஸ்வர்யா லெட்சுமியின் குடும்பத்தினராகக் காட்டப்படுபவர்களின் உணர்வுகளுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கலாம்.

actor soori maaman movie review

முக்கியமாக, பாபா பாஸ்கர் பாத்திரம் மனதில் என்ன இருக்கிறதென்பது இக்கதையில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அது நிகழ்ந்திருந்தால், ‘ஆனந்தம்’ படத்தில் டெல்லி கணேஷ் ஒரு காட்சியில் பின்னிப் பெடலெடுத்தது போன்ற வாய்ப்பு இதில் அவருக்குக் கிடைத்திருக்கும்.

இது போன்ற நிறைய விஷயங்கள் ‘மிஸ்’ ஆகியிருக்கின்றன. முழுக்க சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி, பிரகீத் சிவன் மீதே கவனம் காட்டப்பட்டிருக்கிறது.

’ஹைபர் ஆக்டிவ்’வான குழந்தைகள் பற்றிய பேச்சு வெறுமனே வசனமாக மட்டுமே இப்படத்தில் இருக்கிறது.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பிறக்கிற குழந்தைகளைப் பெற்றோரும் உறவினர்களும் கொண்டாடுவார்கள். கணவன், மனைவி, ஒரு குழந்தை என்றிருக்கிற பல குடும்பங்களிலும் கூட அப்படிப்பட்ட சூழலே இருக்கிறது. actor soori maaman movie review

’அப்படிச் செல்லம் கொடுப்பதும், குழந்தைகளின் தவறுகளைக் கண்டிக்காமல் தவிர்ப்பதும் சரியானதல்ல’ என்கிற விஷயம் இப்படத்தின் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

மிக முக்கியமாக, பெண்களின் மீதான ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தத் துணை நிற்கிற விதத்தில் இக்கதை இருப்பதாகக் குற்றம் சாட்ட நிறைய வாய்ப்புகள் திரைக்கதையில் தரப்பட்டிருக்கின்றன.

மேற்சொன்ன அனைத்திலும் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இது போன்ற பல குறைகளைத் தாண்டி, நம்மை ‘செண்டிமெண்ட்’ கடலில் தள்ளிவிட்ட அனுபவத்தைத் தருகிறது ‘மாமன்’. அந்த வகையில் பிரசாந்த் பாண்டியராஜ் திரையில் செய்திருக்கும் மாயாஜாலம் ஆச்சர்யகரமானது. actor soori maaman movie review

அந்த அலைகளில் சிக்கி, எழுந்து, விளையாடிக் களிப்புற விரும்புபவர்களுக்கு மட்டுமே இப்படம் பிடிக்கும். அவர்களது எண்ணிக்கை அதிகமா, குறைவா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். அதுவே, ‘இப்படம் சூரியின் ஹிட் வரிசையில் சேருமா’ என்பதை முடிவு செய்யும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share