சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடா? உண்மை பின்னணி என்ன? – அமைச்சர் விஜயலட்சுமி ஓபன் டாக்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தனியார் பால் விலை உயர்வால், ஆவின் பால் தட்டுப்பாடு உள்ளது அது விரைவில் சரி செய்யப்படும் என அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

மாதவரம் வளாகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வக துணை கட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

இந்திய தர நிர்ணய ஆணையம் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு – தர நிர்ணய ஆணையத்தின் தர நிலைகளின்படி குடிநீர் பரிசோதனைகள் செய்யவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கழிவுநீர் பரிசோதனைகள் செய்யவும் சென்னை மாதவரத்தில் மத்திய ஆய்வக துணைக் கட்டிடம் ரூ. 2 கோடியே 23 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.

சென்னை மாநகர மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாதவரத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை ரூ. 152 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இது முழுமையான வசதிகளுடன், தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன பால் பண்ணையாக அமைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் இன்று முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது “மாதவரத்தில் உள்ள ஆய்வகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர், மாதவரம் பால் உற்பத்தி மையம் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பால் பண்ணைக் கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்குப் பிறகு 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. குறைகள் ஒவ்வொன்றாகச் சரிசெய்யப்பட்டு வருகின்றன.”என்றார்

ADVERTISEMENT

ஆவின் பால் தட்டுப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டு வழங்குவதால், பால் உற்பத்தியாளர்கள் மீண்டும் ஆவினுக்குத் திரும்பி உள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியதால், பெரும்பாலான மக்கள் ஆவின் பாலுக்கு மாறியுள்ளனர். இதன் காரணமாக சில இடங்களில் ஆவின் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. கூடுதல் கொள்முதல் மூலம் இத்தேவை சரிசெய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 13 லட்சம் லிட்டராக இருந்த பால் விநியோகம், தற்போது 15 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. பால் மட்டுமன்றி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அமுல் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் அனுமதித்து விட்டனர். தற்போது அவை அனைத்தையும் சீரமைத்து வருகிறோம்,” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share