குன்னூர்: மலைப்பாதையில் கார் மீது பாறை விழுந்து ஒருவர் பலி!

Published On:

| By Pandeeswari Gurusamy

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பர்லியார் அருகே காரின் மீது திடீரெனப் பாறை உருண்டு விழுந்த விபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கோவையில் உள்ள தங்களது உறவினரைச் சந்தித்துவிட்டுக் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கார் குன்னூர் அருகே பர்லியார் கீழ்ப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து திடீரென ஒரு பாறை உருண்டு காரின் பின்பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் காரின் பின்புறத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தேவகி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குச் சிகிச்சைப் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி தேவகி படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர்களுடன் காரில் பயணித்த மற்றவர்களும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மலைப்பாதைகளில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் நிலவி வருகிறது. இதனால், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும், குறைந்த வேகத்துடனும் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share