உணர்வெழுச்சியை உருவாக்குகிற ‘பீல்குட்’ படமா?
விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் குறிப்பிட்ட பார்முலாவிலேயே அமையும். உதாரணமாக, கிளைமேக்ஸில் குறிப்பிட்ட அணி கடுமையாகப் போராடி வெற்றி பெறுவதாக வடிவமைக்கப்படும். அந்த போராட்டத்தில் நாயகன், நாயகி அல்லது குறிப்பிட்ட பாத்திரங்கள் ஈடுபடுவதாகத் திரைக்கதை வடிக்கப்பட்டிருக்கும். aamir khan sitare zameen par movie review
போலவே, மாற்றுத்திறனாளிகள் குறித்த கதைகளும் கூடத் திரையில் அவர்களது வெற்றிகளையே மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். அதே காயங்கள், வலிகள், கண்ணீர், வெற்றி தரும் ஆறுதல் என்று அவற்றின் உள்ளடக்கம் இருக்கும்.
இந்தி நடிகர் அமீர்கான் இரு வகைமையில் அமைந்த கதைகளிலும் முத்திரை பதித்தவர். போலவே, மேற்சொன்ன பார்முலாவைச் சிறப்பாகக் கையாள்பவர் என்ற பாராட்டுகளைப் பெற்றவர். அந்த திறமையே ஒருகட்டத்தில் திகட்டும் அளவுக்குச் சென்றதால் மரண அடி வாங்கியது அவர் நடித்த ‘லால் சிங் சத்தா’.
அவரது புதிய படமான ‘சிதாரே ஜமீன் பர்’ கூட அது போன்ற எதிர்மறை விமர்சனங்களையே பெறும் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
அதனைத் தகர்த்து, உள்ளடக்கத்தில் உயர்ந்து நிற்கிறதா ‘சிதாரே ஜமீன் பர்’?

மாற்றமே இயல்பானது!
சிறு வயதில் தந்தை விட்டுச் செல்ல, தாயின் அரவணைப்பில் இருக்கிற ஒரு சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் எப்படி இருப்பார்? எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவராக, சக மனிதர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவராக, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறவராக, இன்னும் பலவாக இருப்பார்.
அப்படியொரு மனிதனே இக்கதையின் நாயகனான குல்ஷன் (அமீர்கான்). கூடைப்பந்து அணியொன்றின் உதவி பயிற்சியாளரான இவருக்குத் தலைமை பயிற்சியாளர் பதவி மீது கண். அதனை அறிந்து, அவ்வப்போது அவரை ‘நோஸ்கட்’ செய்து வருகிறார் அந்த தலைமை பயிற்சியாளர். ஒருநாள் அந்த பயிற்சியாளரைத் தாக்கிவிடுகிறார் குல்ஷன்.
அன்றைய தினம் ‘சிறப்பான’ மது போதையில் தனது காரைக் கொண்டு காவல் துறை வாகனம் மீது மோதுகிறார். வழக்கறிஞர் அவரை ஜாமீனில் எடுக்கிறார்.
கூடைப்பந்து சம்மேளன நிர்வாகி குல்ஷன் மீது புகார் ஏதும் பதிவாகாமல் பார்த்துக் கொள்கிறார்.
ஆனால், காவல் துறை சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்கிறது. நீதிபதியோ, குல்ஷனின் கடந்த காலச் செயல்பாட்டை மனதில் கொண்டு அவருக்குத் தண்டனை வழங்க வேண்டாம் என்று நினைக்கிறார். அதற்குப் பதிலாக, அறிவுத்திறன் குறைபாடுடையவர்களைக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் அணிக்கு கூடைப்பந்து பயிற்சியாளராகச் செயல்படுமாறு உத்தரவிடுகிறார்.
மூன்று மாத காலம் குல்ஷன் அந்த பொறுப்பை ஏற்று நடக்க வேண்டும் என்பதே நீதிபதியின் உத்தரவு. ஆனால், அந்த மாற்றுத்திறனாளிகளைப் பைத்தியங்களாக நினைக்கிறார் குல்ஷன்.
அவரது சிந்தனை தவறு என்பதை முதல்நாளிலேயே நிரூபிக்கின்றனர் அந்த அணியில் இருப்பவர்கள். அவர்களுக்கு கூடைப்பந்து விளையாட்டை குல்ஷன் கற்றுக் கொடுத்தாரா அல்லது அவர்களிடம் இருந்து வாழ்க்கை பாடங்களை அவர் கற்றுக்கொண்டாரா?
இந்த கேள்விக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
’மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதைப் போல, ‘மாற்றங்களே இயல்பானவை’ என்று சொல்கிறது ‘சிதாரே ஜமீன் பர்’. கூடவே, இந்த உலகில் ‘நார்மல்’ என்று எந்த மனிதரும் இல்லை என்கிறது.
இது போன்ற பல விஷயங்களை ‘கருத்து கந்தசாமி’யாகப் போதிக்காமல், நகைச்சுவையாகச் சொன்ன வகையில் ஈர்க்கிறது இப்படம். அதன் வழியே படம் பார்க்கிறவர்களில் பெரும்பாலானோரை தன்வசப்படுத்துகிறது.

சிறப்பான ‘மேக்கிங்’!
ஹாலிவுட் நடிகர்கள் என்றால் இப்படித்தான் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு பல நேரங்களில் பொய்த்துப் போகாது. கிட்டத்தட்ட அப்படியொரு வளையத்திற்குள் சிக்கிய அமீர்கான், இப்படத்தில் அதிலிருந்து லாவகமாக வெளியே வந்திருக்கிறார்.
‘இன்னும் இளமை துள்ளுகிறது’ என்று காட்டிக் கொள்ளாமல், ‘எனக்கு வயசாகிடுச்சு’ என்ற வசனங்களைப் பேசியவாறே துறுதுறுவென்று திரையில் நடமாடுகிறார். அதுவே ‘வாவ்’ என்று அமீர்கானை பார்த்துச் சொல்ல வைக்கிறது.
இதில் குல்ஷன் மனைவி சுனிதாவாக நடித்திருக்கிறார் ஜெனிலியா. அவருக்கும் அமீர்கானுக்குமான ‘கெமிஸ்ட்ரி’ அபாரம். கூடவே, இன்னமும் தான் ‘ஜானே தூ யா ஜானே நா’ நாயகிதான் என்று காட்டும்விதமாகத் திரையில் இளமை துள்ள வந்து போயிருக்கிறார்.
நாயகனின் தாயாக வரும் டாலி அலுவாலியா, அவரது வீட்டில் வேலை செய்பவராக வரும் பிரிஜேந்திர கலா, கூடைப்பந்து அணி பயிற்சியாளர், மாற்றுத்திறனாளிகள் அணி மேலாளர் உட்படச் சுமார் அரை டஜன் கலைஞர்கள் சில காட்சிகளில் வந்து போனாலும் அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து அணியைச் சேர்ந்தவர்களாக வரும் அரோஷ், கோபிகிருஷ்ணன், வேதாந்த், நமன், ரிஷி, சிர்ஷப், ஆஷிஷ், சம்வித், சிம்ரன், ஆயுஷ் ஆகியோரில் சிலருக்கு மட்டும் பின்னணி திரையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை மீறி, சமகால நிகழ்வுகளைச் சொல்லும் காட்சிகளில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

’சாம்பியன்ஸ்’ எனும் ஸ்பானிஷ் படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். இதன் திரைக்கதை வசனத்தை அமைத்திருக்கிறார் திவி நிதி சர்மா. சோகமான, கோபமான, வழக்கத்திற்கு மாறான உணர்வுகளைக் கொண்டிருக்கிற காட்சிகளையும் கூட அவர் நகைச்சுவையாக அணுகியிருப்பது சிறப்பு. அதுவே, ‘ரொம்ப ட்ரையா இருக்கு’ என்று சொல்லவிடாமல் இப்படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.
படம் முழுக்க ‘பீல்குட் அனுபவம்’ கிடைக்குமாறு செய்ததில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் நிகில் கோவாலே மற்றும் அபூர்வா விஜய் பகத், படத்தொகுப்பாளர் சாரு ஸ்ரீ ராய், பின்னணி இசை தந்த ராம் சம்பத் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது.
சங்கர் இஷான் லாயின் பாடல்கள் நம் மனதோடு ஒட்டிக் கொள்கின்றன.
இப்படமானது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் பதிப்பு வசனங்கள் இயல்பானதாக உள்ளன. இதுவரை நாம் கேட்காத குரல்களைக் கேட்கிற வகையில் சில டப்பிங் கலைஞர்களின் பங்களிப்பு இதிலுள்ளது.
’இப்படித்தான் இந்தப் படத்தின் உள்ளடக்கம் இருக்கும்’ என்ற எண்ணத்தோடு வருகிற ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு படைப்பைத் தருவதோடு, வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தையும் கொடுக்கிற பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா.
நிறைய மனிதர்களைக் கொண்டிருக்கிற பிரேம்களிலும் சரி, ஓரிருவர் வருகிற இடங்களிலும் சரி, குறிப்பிட்ட காட்சி அல்லது ஷாட்டில் வெளிப்படுகிற உணர்வுகள் நூறு சதவிகிதம் வந்தாக வேண்டும் என்கிற முனைப்பைக் கொட்டியிருக்கிறார்.
’சிறப்பான மேக்கிங்’ மூலமாகத் திரும்பத் திரும்ப இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற தூண்டுதலை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதே நேரத்தில், ‘தாரே ஜமீன் பர்’ அளவுக்குக் கண்ணீரைப் பொங்கச் செய்கிற வகையிலும் இப்படம் இல்லை. இது 2கே மற்றும் ஜென்ஸீ தலைமுறையினரை ஆற்றுப்படுத்தும் தகவலாக இருக்கும்.
எந்தவொரு நட்சத்திர கலைஞரும் குறிப்பிட்ட கட்டத்தில் தனது ‘ப்ளஸ்’களையே ‘மைனஸ்’களாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தச் சூழலைக் கடக்கப் புதியனவற்றை அளவோடு கைக்கொள்ள வேண்டியிருக்கும். பழையவற்றைக் குறிப்பிட்ட அளவில் மட்டுமே வெளிப்படுத்துகிற கட்டாயம் ஏற்படும். அமீர்கான் அப்படியொரு நிலைக்கு ஆளானதைப் புரிந்துகொண்டு, ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தை ஒரு ‘பீல்குட் திரையனுபவமாக’த் தந்திருக்கிறார் ஆர்.எஸ்.பிரசன்னா.
இது போன்ற வகைமை கதைகளில் என்னென்ன ‘க்ளிஷேக்கள்’ இருக்குமென்று நாம் நம்புகிறோமோ, அவை ஓரளவுக்கு ‘சிதாரே ஜமீன் பர்’ரில் உள்ளன. அதனை மீறி இப்படம் நமக்குச் சுவாரஸ்யத்தைக் கொட்டிக் கொடுக்கிறது என்பதுவே சிறப்பு!