சட்டமன்ற தேர்தல் 2026 : புதிய நீதிக் கட்சி போட்டி.. தொகுதிகளின் விபரங்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

acshanmuga

தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும் என இன்று (மார்ச் 27) அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவிற்கு 27, பாமகவிற்கு 18, அமமுகவிற்கு 11, தமாகாவிற்கு 5, ஐஜேகேவிற்கு 2, ஜான்பாண்டியன் கட்சிக்கு 1, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதன் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும் புதிய நீதிக்கட்சி போட்டியிட உள்ளது.

ADVERTISEMENT

அதிமுகவுடன் நடந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளார். மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி போட்டியிடும். இரண்டாவது தொகுதியாக பாரதிய ஜனதாவின் தலைமை ஒரு தொகுதியை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

புதிய நீதி கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும். அதிமுக எனது தாய் வீடு. தாய் வீட்டின் சீதனமாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நான் புகுந்த வீடாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வாஜ்பாய் காலத்தில் இருந்தே தொடர்கிறோம். பாரதிய ஜனதாவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்க உள்ளார்கள். அதற்காக பாரதிய ஜனதாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இரண்டு தொகுதிகளிலும் புதிய நீதி கட்சி வெற்றி பெறும். நாளை மறுதினம் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம். அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கும் தொகுதியில் தாமரை சின்னத்திலும் புதிய நீதிக் கட்சி போட்டியிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share