நீர்ஜா விமர்சனம் – -புகழ்

Published On:

| By Balaji

பாலிவுட்டில் இது ஃப்ளைட்டுகளின் காலம் போலும்! இன்னும் சொல்லப்போனால், விமானப் பயணங்களை மையமாக வைத்து நடந்த ‘உண்மை நிகழ்வுகளின்’ காலம். அக்‌ஷய்குமார் நடித்து ஹிட்டடித்த ஏர் லிஃப்ட்டுக்குப் பிறகு, அதைப்போலவே வெளி வந்துள்ளது சோனம் கபூரின் இன் & அச் ‘நீர்ஜா’. கராச்சியில், 1986 செப்டம்பர் 5ம் தேதி கடத்தப்பட்ட பானாம் விமானத்தில் நடந்த நிகழ்வுகள்தான் இத்திரைப்படம்.

இஸ்ரேலிலும், சைப்ரசிலும் கைதிகளாக இருக்கும் தமது சக தீவிரவாதிகளை விடுவிப்பதற்காகவும், சைப்ரஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகவும், மும்பையிலிருந்து நியூயார்க் வரும் (கராச்சி ஸ்டொபொவெர்!) விமானத்தைக் கடத்துகிறார்கள் அபு நிடால் இயக்கத்தைச் சேர்ந்த பாலஸ்தீனத் தீவிரவாதிகள். அப்போது, காக்பிட்டில் இருந்த பைலட்கள் தப்பித்துவிட, விமானம் சைப்ரஸ் செல்லமுடியாமல், கராச்சி ஏர்போர்ட்டிலேயே நிற்க நேரிடுகிறது. அவ்விமானத்தில், தன் முதல் வேலைநாளைத் தொடங்கயிருக்கிறார் கேபின் க்ரு ஹெட் பஞ்சாபைச் சேர்ந்த நீர்ஜா பனோட். மண வாழ்க்கை முறிந்த அவருக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக அமைந்திருக்கிறது அப்பணி. இந்த இக்கட்டான நேரத்தில் அவருடைய பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் , பயணிகளில் பலரைக் காப்பற்றியதோடு, அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா-வையும் வாங்கிக் கொடுத்தது.

ADVERTISEMENT

மேற்சொன்ன வரலாற்று நிகழ்வுதான் ‘நீர்ஜா’ திரைப்படத்தின் ஒட்டுமொத்தக் கதையும், திரைக்கதையும். ஆரம்பம் முதல் முடிவு வரை அத்தனையும் அப்பட்டமாகத் தெரிந்தபிறகும்கூட, படம் பார்ப்பதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது நீர்ஜா. அதற்கு, திரையரங்கில் கண்ட அமைதியும், நெக்குருகலுமே சாட்சி. கதைநாயகி நீர்ஜா-வாக சோனம் கபூர். படத்தின் முடிவில், உண்மை நீர்ஜாவின் பழைய போட்டோவைக் காட்டுகிறார்கள். ஒப்பிட்டுப்பார்த்தால், சோனம் கபூர் அப்படியே நீர்ஜா-வைப் போலத்தான் இருக்கிறார். ஒப்பனையிலும், நடிப்பிலும் அனாயசம் காட்டியிருக்கிறார் சோனம். படத்தில், சோனமுக்கு நிகராக நடித்திருப்பது அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஷப்னா ஆஷ்மி. தைரியமான அம்மாவாக அவர் நடித்திருக்கும் அந்த இறுதிக் காட்சியின்போது அரங்கில் பின் ட்ராப் சைலன்ஸ். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று அவ்வளவாக இல்லை என்பதால் அரங்கத்தின் அந்த மௌனம் மனதை ஏதோ செய்தது.

மற்றபடி, ஒரு படம் என்பதைத் தாண்டி எண்பதுகளின் ஒரு வரலாற்று நிகழ்வைத்தான் அப்படியே நம் கண்முன் நிறுத்தியுள்ளார்கள். இயக்குநர் இராம் மத்வானியும், கலை இயக்குநர்களும் பாராட்டுக்குரியவர்கள். விமானத்திலிருந்து, நீர்ஜாவின் முறிந்த மணவாழ்க்கைக்கும் பின், அங்கிருந்து இங்குமாக மாறிமாறி வரும் இந்த யுக்தி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

ADVERTISEMENT

நம் நாடு, இப்போது தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கும் அண்டைநாட்டு உறவுகளின் சூழலில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு எதிர் துருவ நாடுகளின் மிக உயரிய விருதுகளையும் வாங்கியிருக்கும் நீர்ஜாவின் வாழ்க்கையை, திரும்பிப் பார்ப்பது அவசியமான ஒன்றுதான். போலவே, வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துள்ள பெண்ணியச் சுவடுகளையும்!

ஆனால், அதே நேரத்தில் தீவிரவாதிகள் என்றாலே ஒரு குறிப்பிட்ட இனத்தையோ,மதத்தையோ சேர்ந்தவர்கள்தான் என பொதுபுத்தியில் உறைய வைக்கும் செயலைக் கொஞ்சம் மட்டுப்படுத்த வேண்டிய அவசியம்மும் இருக்கிறது.

ADVERTISEMENT

‘வாழ்க்கையென்பது நீளமாக இருக்கத் தேவையில்லை, பொருள் உள்ளதாக இருக்க வேண்டும்’ என்கிற நீர்ஜாவின் சொற்களிகேயே அதற்கான பதில் இருக்கிறது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share