கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் குறைந்த அளவில், குறைந்த விலையில் பெக் பாட்டில்கள் இன்று (ஜூன் 29) முதல் விற்பனை செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டு முதலாம் ஆண்டு நினைவு நாள் கடந்த மாதம் அனுசரித்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஐ தாண்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100க்கும் மேலாக விற்பனை செய்யப்படுவதால் தான், கூலி வேலை செய்யும் மக்கள் அந்த பக்கம் போகாமல் கள்ளச்சாராயம் குடித்து உயிரை இழக்கின்றனர் என்பது மக்கள் மத்தியில் உள்ள பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.
அதனால் கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்கவும், டாஸ்மாக் கடைகளில் வருமானத்தை பெருக்கவும் கூலித் தொழிலாளிகள் எளிதாக வாங்கி குடிக்கும் வகையில் (90 ML) கட்டிங் பாட்டில்களை குறைந்த அளவில் குறைந்த விலையில் விற்பனை செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஜூன் 29 ஆம் அறிவிக்க உள்ளார்.
இதனையடுத்து இதற்கான விற்பனையை இன்று முதல் துவங்க டாஸ்மாக் அதிகாரிகளும் அமைச்சரும் இரவும் பகலுமாக செய்து வருவதாக சொல்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
இந்த நிலையில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச்சாராய அளவும் போதையும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யபோகும் 90 ML கட்டிங் பாட்டில்களில் கிடைக்குமா? குடிப்பிரியர்களின் நிலையை மாற்ற முடியுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
மேலும் பாமக உட்பட பல்வேறு கட்சிகள் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து கோரி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த பெக் பாட்டில்கள் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்வினையாற்ற போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
டாப் 10 நியூஸ் : மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை!