டிஜிட்டல் திண்ணை: மத்தவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கள்ளக்குறிச்சி செல்வதற்கு முன்… ஸ்டாலின் செய்யும் ‘சட்ட’மன்ற சம்பவம்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம்  கொண்டு வரப்படும் என்ற  முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பு  வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“கடந்த ஜூன் 19, 20 தேதிகளில்  கள்ளக்குறிச்சியில் நடந்த  கள்ளச்சாராய கொடூரங்கள்  மாநிலத்தையே அதிர வைத்தன.  இன்று  ஜூன் 28ஆம் தேதி வரை  65 பேர்  கள்ளச்சாராயத்தால்  உயிரை இழந்து விட்டனர்.

இந்த நிலையில்தான்  தமிழ்நாடு  சட்டமன்றத்தில்  கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு, விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று  முதலமைச்சர் ஸ்டாலின்  ஜூன் 28ஆம் தேதி  அறிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  சம்பவம்  நடந்த போது  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சற்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை பயணம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால்தான் அவர் உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை  20 ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்த  முதலமைச்சர் ஸ்டாலின், அதை அன்றே அமைச்சர் உதயநிதி அங்கு சென்றபோது அவர் மூலமாக வழங்க வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு,  கள்ளக்குறிச்சி திமுக மாசெக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன்,  மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர்  தொடர்ந்து அங்கே முகாம் இட்டு  நிவாரண பணிகளையும்  சிகிச்சை பணிகளையும்  ஆய்வு செய்து துரிதப்படுத்தினார்கள்.

ஆனபோதும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என்ற  கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.  ஜூன் 27ஆம் தேதி அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது  கூட, எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஸ்டாலினை நோக்கி இதே கேள்வியை தான் கேட்டார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களுமே கூட,   ‘எப்போதுமே இது போன்ற  அசம்பாவிதங்கள்  நடந்தால்  முதலமைச்சர் ஸ்டாலின் ஓடோடி சென்று விடுவாரே… இந்த முறை ஏன் அவர் செல்லவில்லை? என்று தங்களுக்கு நெருக்கமான திமுக பிரமுகர்களிடம் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தான்  கள்ளக்குறிச்சிக்கு செல்வது பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின்.  அப்போது அவர்,  ’நமது அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே  முகாம் இட்டு  பணிகளில் ஈடுபட்டனர்.  மற்ற கட்சி தலைவர்கள்  கள்ளக்குறிச்சிக்கு உடனடியாக சென்று  அங்கிருக்கும் மக்களை சந்தித்து  ஆறுதல்கூறி, அரசை நோக்கி கடுமையான விமர்சனம் வைத்தனர்.

அவர்கள் எதிர்க்கட்சி என்பதால் இதை அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.  ஆனால் அவர்களுக்கும்  எனக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.  அரசு ரீதியாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி இருக்கிறோம்.  இது உடனடி தீர்வு தான். ஆனால், இந்த விவகாரத்தில் நீண்ட கால தீர்வு எட்டப்பட வேண்டும்.  அதற்கான  ஒரு முயற்சியை  செய்துவிட்டு தான்  அங்கே நான் செல்ல வேண்டும்’  என்று  கூறி இருக்கிறார் ஸ்டாலின்.

நீண்ட கால தீர்வு  என்ன என்று  விவாதிக்கப்பட்ட நிலையில் தான்  தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு, விற்பனை செய்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை  வழங்கலாம் என்று  முதலமைச்சருக்கு ஆலோசனை அளிக்கப்பட்டது. இப்போது  கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு  விற்பவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படுகிறது என்று ஆராய்ந்தார்  ஸ்டாலின்.

மதுவிலக்கு சட்டத்தில் இப்போது  கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு பெரிய தண்டனை இல்லை.  4 (1) a 60, 4 (1) a a, 4 (1) aaa, 4 (1)  A  ஆகிய பிரிவுகள்தான் இப்போது  கள்ளச்சாராய வழக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அதாவது  4 (1) a 60 என்றால் அறுபது லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்தால் பதியப்படும் செக்‌ஷன், அதற்கு மேல் வைத்திருக்கும் அளவுகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த செக்‌ஷன்களில் வழக்குப் பதியப்படும்.

இவற்றில்  4 (1) A  பிரிவுதான் அதிக தண்டனை வழங்கும் பிரிவு. இதை ’கேபிடல் ஏ’ என்று காவல்துறையினர், வழக்கறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.

முதல் மூன்று பிரிவுகளும் பெயிலபிள் பிரிவுகள். அதிக அளவு சாராயம் வைத்திருந்தாலோ, அல்லது தொடர்ந்து இந்த குற்றத்தை செய்துகொண்டிருந்தாலோ ‘கேபிடல் ஏ’ வழக்கு போடுவார்கள். அதன் அதிகபட்ச தண்டனையே 7 வருடங்கள்தான். ஆனால் இந்த அளவுக்கு தண்டனை பெறும் வழக்குகள் மிகவும் அரிது.

இந்த விவரங்கள் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்தான்…   ‘கள்ளக்குறிச்சி விவகாரத்திற்காக நாம் எடுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கை, தமிழ்நாடு முழுவதற்குமான ஒரு தீர்வாக  இந்த  பிரச்சினையில் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் மதுவிலக்கு சட்டத்தில்  திருத்தம் கொண்டு வந்து  கடுமையான தண்டனை  வழங்கப்பட வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தார் ஸ்டாலின்.

அதைத்தான் ஜூன் 28ஆம் தேதி சட்டமன்றத்திலும்  அறிவித்தார்.   ஜூன் 29  காலை  தமிழ்நாடு சட்டமன்றத்தில்  போலீஸ்,  மதுவிலக்கு  மானிய கோரிக்கை  விவாதத்திற்கு  பதில் அளிக்கும் போது  மதுவிலக்கு சட்டம் 1937 இல் முக்கியமான  திருத்தங்களை கொண்டு வந்து அதிக தண்டனை அளிக்க வழிவகைகள் செய்துவிட்டு…   அதையடுத்தே  சட்டமன்றம் கூட்டத்தொடர் முடிந்த பிறகு கள்ளக்குறிச்சிக்கு செல்ல இருக்கிறார் முதலமைச்சர் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

இதுமட்டுமல்ல, சமீபத்தில் பணியில் இருக்கும் போலீசார் அரசுப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்க வேண்டுமா என்ற பிரச்சனையில் போலீசாருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த வீடியோ மிகப்பெரிய பேசுபொருளானது. இது உள்ளிட்ட போலீசாரின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் சில அறிவிப்புகளையும் போலீஸ் மானியக்கோரிக்கை பதில் உரையில் முதலமைச்சர் வெளியிட இருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவல்துறை உதவியுடன் கள்ளச்சாராயம் விற்பனை: பிரேமலதா குற்றச்சாட்டு!!

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் பார்வதியின் ‘உள்ளொழுக்கு’

+1
0
+1
1
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

1 thought on “டிஜிட்டல் திண்ணை: மத்தவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கள்ளக்குறிச்சி செல்வதற்கு முன்… ஸ்டாலின் செய்யும் ‘சட்ட’மன்ற சம்பவம்!

  1. அடுத்து பாக்கெட் சாராயம் விற்க ஏற்பாடு செய்து விட்டு மற்றதை சிந்திப்பார். அதை தவிர ஒரு வித்தியாசமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *