சென்ற ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் படையெடுத்து, ஒருவழியாக வெளிவந்தேவிட்டது வாலிபராஜா. பெயருக்குத்தான் நாயகனாக சேது! ‘வாலிபராஜா’ என்னும் டைட்டில் முதற்கொண்டு, மார்க்கெட் வரை அனைத்தும் சந்தானம்தான்.
சந்தானம், ஒரு மனோதத்துவ மருத்துவர் வாலிபராஜா. அவரிடம் சிகிச்சைக்குவரும் நாயகனது பிரச்சினையைத் தீர்த்துவைப்பதுதான் படம். நாயகிகள் விசாகா சிங், நுஸ்ரத். இவர்கள் தவிர, பஞ்சு சுப்பு, விடிவி கணேஷ், மதுமிதா, மொட்டை இராஜேந்திரன், தேவதர்ஷினி, கும்கி அஷ்வின், ஏன்…..போண்டாமணி உட்பட கோடம்பாக்கத்தின் எல்லா நகைச்சுவை நட்சத்திரங்களும் படத்தில் ஆஜர். ஆளுக்கு ஒரு காட்சி வந்திருந்தாலும்கூட படம் நகைச்சுவை சரவெடியாக இருந்திருக்கும். நாயகன் சேதுவுக்கு இடம்கொடுத்தோ என்னவோ, சந்தானத்தின் வழக்கமான கவுண்ட்டர் வசனங்களுமேகூட அடக்கியே வாசிக்கப்பட்டிருக்கிறது. கதையுமேகூட, சந்தானம் இதற்குமுன்பு நாயகனாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் கதையை ஒத்தே இருக்கிறது. நாயகி உட்பட நடிகர்களும் அவரது கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களாகவே இருப்பதால் பழைய படங்களைப் பார்ப்பதுபோல வரும் எண்ணத்தைத் தவிர்க்க முடிவதில்லை. மற்றபடி ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு அனைத்தும் ஓ.கே. லெவல்தான்.
திட்டமிட்டபடி, முன்னமே வந்திருந்தால்கூட அந்த நடுக்கடல் ப்ரமோ பாடல், சந்தானம் ஃபேக்டர் என கொஞ்சமாவது ஓடியிருக்கும். அநியாயத்துக்கு லேட்டானதால் ‘லேட்’ ஆகிவிட்டது படம். அட, அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காகவாச்சும் ஒரு தடவை பார்க்கலாம்ப்பா….
-புகழ்
