நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை (80th Independence Day) முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆகஸ்ட் 15-ந் தேதி தேசிய கொடியேற்றினார்.
நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள், “தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு”, ”2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளைஞர் சக்தி” ஆகியவற்றை கருப்பொருளாக வைத்து கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டை கொண்டாட்டத்தில் இன்று முதல் முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத், முப்படைகளின் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகியோர் வரவேற்றனர்.
இதனையடுத்து டெல்லி பகுதி தளபதி பிரதமர் மோடியை கொத்தளத்தில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்ல நாட்டின் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 13-வது முறையாக இன்று தேசியக் கொடியேற்றினார். இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
