75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில பகுதிகளில் மாரத்தான் ஒட்டம் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசும் செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சுதந்திர தின விழிப்புணர்வு மாரத்தான் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்து வருகிறது.

நெல்லை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர்கள் சார்பில் மாரத்தான் ஒட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். வ.உ.சி மைதானத்தில் இருந்து தொடங்கி பாலை பேருந்து நிலையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று எம்.என். அப்துல் ரகுமான் உயர்நிலை பள்ளியில் முடிவடைகிறது. பள்ளி, கல்லூரி, ஆண்கள், பெண்கள், பொதுப்பிரிவு போன்ற 8 பிரிவுகளில் இந்த ஓட்டம் நடைபெற்றது.
கோவை
கோவையில் சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் மாரத்தான் ஓட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை மத்திய அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஓட்டம் இந்துஸ்தான் கல்லூரியில் தொடங்கி முக்கிய சாலைகளின் வழியாக 7.2 கி.மீ தூரம் சென்று மீண்டும் இந்துஸ்தான் கல்லூரியில் வந்து முடிவு பெற்றது. அமைச்சர் எல். முருகன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
திருச்சி
திருச்சியில் உழவர் சந்தை மைதானத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 5 கி.மீ தூரத்திற்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

போட்டி முடிந்த பிறகு, அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
சென்னை
சென்னை ராணுவ கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், இருசக்கர வாகனப் பேரணி நந்தம்பாக்கத்தில் உள்ள பாதுகாப்பு காவலர்கள் குடியிருப்பில் இருந்து தொடங்கியது.
நந்தம்பாக்கத்தில் இருந்து கத்திபாரா, சைதாப்பேட்டை வழியாக தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டு அலுவலகம் வரை நடந்த பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
சுதந்திர தின விழிப்புணர்வு மாரத்தானில் மாணவ, மாணவிகள், ஓட்டப்பந்தய வீரர்கள் அனைவரும் கையில் தேசிய கொடியுடன் கலந்து கொண்டனர்’
மோனிஷா