நீச்சல் பயிற்சிக்கு போய் பலியான சிறுவன்: தாயாரின் கண்ணீர்க் கேள்விகள்!

Published On:

| By christopher

நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் நேற்று (ஜூன் 8) உயிரிழந்த நிலையில், அந்த சிறுவனின் தாயார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் நந்தகுமார் – தாரிகா. இவர்களுக்கு சஸ்வின் வைபவ் (6), சித்திக் வைபவ் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

அங்குள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்த சஸ்வின் வைபவ் கோடை விடுமுறையை முன்னிட்டு அதே பகுதி சுந்தரம் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று தாரிகா தனது இரு மகன்களையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.

ADVERTISEMENT

சஸ்வின் வைபவ் நீச்சல் பழகிக்கொண்டு இருந்த போது தாரிகா தனது மற்றொரு மகன் சித்விக் வைபவுக்கு உணவு கொடுக்க நீச்சல் குளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு அழைத்து சென்றார்.

அப்போது நீச்சல் குளத்தில் இருந்த சிறுவன் சஸ்வின் வைபவ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் யாரும் கவனிக்காத நிலையில் சிறிது நேரத்தில் சஸ்வின் வைபவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இதற்கிடையே சிறிது நேரத்துக்கு பின்னர் தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான். அவனை தேடிய போது நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டது தெரிய வந்தது. அவனது உடலை மீட்ட நிலையில் பார்த்து தாரிகா அலறி துடித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மணிமங்கலம் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூழ்கிய மகனை தூக்கக் கூட யாரும் இல்லை!

இந்நிலையில் இந்த துயரமான சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுவனின் தாய் தாரிகா கண்ணீருடன் தொலைபேசி வாயிலாக ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

“எனது இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு நானும், எனது தாயாரும் நீச்சல் குளத்திற்கு சென்றோம். நான் 2 வயது குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறிய நிலையில், உடன் வந்த எனது தாயாரை டிக்கெட் வாங்குமாறு கூறி வெளியேற்றி விட்டனர்.

எனது தாயாரை அங்கே இருக்க விட்டிருந்தால் என் மகன் உயிரோடு இருந்திருப்பான். டிக்கெட் காரணம் காட்டி அனுமதி மறுத்தது ஏன்?

மூழ்கிய என் மகனை தூக்கக் கூட அந்த பயிற்சி மையத்தில் யாரும் இல்லை. முதலுதவி சிகிச்சை அளிக்கவும் அங்கு எதுவும் இல்லை. நீச்சல் குள தண்ணீரிலும் அளவுக்கு அதிகமாக  குளோரின் கலந்துள்ளனர்.

எனது மகனின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதன் மீது உரிய விசாரணை நடத்தி போலீசார் நீதி கிடைக்க செய்ய வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து பலி!

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை பெரியமேடு மைலேடி பூங்கா நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த இருமாத காலத்திற்குள் மீண்டும் அதே போன்று சோக சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!

முதல் திருமண நாள்: குழந்தைகளின் முகம் காட்டிய நயன்தாரா… உருகிய விக்னேஷ் சிவன்

6 year old boy died at neelamangalam swimming pool
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share