சென்னையில் 30,000 மரக்கன்றுகள்: மாநகராட்சி திட்டம்!

Published On:

| By Selvam

30,000 மரக்கன்றுகள் மற்றும் செடிகளை பூங்கா மற்றும் சாலை மையத்தடுப்புகளில் நட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மையத்தடுப்புகள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோரப் பூங்காக்கள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இவற்றை சீரமைத்து, புனரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, ஒவ்வொரு பூங்காவிலும் 6 அடி உயரத்தில் 50 முதல் 100 எண்ணிக்கையில் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், செடிகள் நடுதல், புல்வெளி அமைத்தல், சுவர்களில் வர்ணம் பூசுதல், அமரும் இருக்கைகளைச் சீரமைத்தல்,

கூடுதலாக இருக்கைகள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்களை புதுப்பித்தல், புதிதாக நடைபயிற்சி பாதைகள் அமைத்தல், மின்விளக்குகளை சரி செய்தல், செயற்கை நீருற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் சாலை மையத்தடுப்புகளில் மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட 30,000 மரக்கன்றுகள் மற்றும் செடிகளை வாங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் மண்டல அளவிலான அதிகாரிகள் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், “சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் 30,000 மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி சென்று 12ஆவது மண்டல செயற்பொறியாளர் மரக்கன்றுகள் மற்றும் செடிகளை வாங்கி வந்துள்ளார். 6,7,8,10,11,12 மற்றும் 13ஆவது மண்டலங்களில் இவை நடப்படும்.

இனி வரும் நாட்களில் தொடர்ந்துமரக்கன்றுகள் மற்றும் செடிகள் வாங்கப்படும். மொத்தம் 30,000 மரக்கன்றுகள் மற்றும் செடிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்..

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி பைனாப்பிள் கேசரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share