2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பாராத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல் தேர்தலிலேயே, குறிப்பாக கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களிலேயே வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அவரது கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகியுள்ளது. எனினும் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி வெற்றி பெறாததால், அவரால் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது.
அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ( 98,110 ) வெற்றி பெற்றிருக்கிறார். எனினும் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ஈசிஆர் சரவணன் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் (96,780) தோற்கடித்துள்ளார்.
அதுபோன்று மாதவரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய பிரபு 94,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதில் இன்னொரு ட்விஸ்ட்டாக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனை ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
முதல்வராக இருந்த ஸ்டாலின் தொடங்கி, மூத்த அமைச்சராக இருந்த துரைமுருகன் , முன்னாள் அமைச்சர்கள் நாசர், மா சுப்பிரமணியன், ராணிப்பேட்டை காந்தி, பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், தா மோ அன்பரசன், சபாநாயகராக இருந்த அப்பாவு ஆகியோரை தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர்.
திமுக மட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை விஜய் கட்சி வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர். திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி தங்கமணி ஆகியோரும் விஜய் கட்சி வேட்பாளர்களிடம் தோற்றுள்ளனர்.
இவர்களை தவிர நட்சத்திர வேட்பாளர்களாக பார்க்கப்பட்ட திமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்ட திமுகவின் கார்த்திக் மோகன், மயிலாப்பூரில் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, கோவை வடக்கு தொகுதியில் பாஜக வானதி சீனிவாசன், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் உள்ளிட்டோரையும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 13 பெண்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளனர். சிவகாசியில் போட்டியிட்ட கீர்த்தனா, அவிநாசி கமலி, திருப்பூர் சத்தியபாமா, கவுண்டம்பாளையம் கனிமொழி சந்தோஷ், கிருஷ்ணராயபுரம் சத்தியா, சிவகங்கை குழந்தை ராணி, ராஜபாளையம் ஜெகதீஸ்வரி, பல்லாவரம் காமாட்சி, திரு வி க நகர் பல்லவி, ராணிப்பேட்டை தாஹிரா, குடியாத்தம் சிந்து, குமாரபாளையம் விஜயலட்சுமி, பவானிசாகர் தமிழ் செல்வி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இப்படி தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சாதனை படைத்திருந்தாலும் 8 மாவட்டங்களில் ஒரு சீட் கூட பெறவில்லை.
தென்காசி, கன்னியாகுமரி, அரியலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக வெற்றிக்கழகம் கணக்கை தொடங்கவில்லை.
சரி, எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட்டது? எத்தனை இடங்களில் வென்றது?
திமுக கூட்டணி
| கட்சிகள் | போட்டி | வெற்றி | இழந்த தொகுதிகள் |
| திமுக | 176 | 59 | 117 |
| காங்கிரஸ் | 28 | 5 | 23 |
| தேமுதிக | 10 | 1 | 9 |
| விசிக | 8 | 2 | 6 |
| சிபிஎம் | 5 | 2 | 3 |
| சிபிஐ | 5 | 2 | 3 |
| ஐயுஎம்எல் | 2 | 2 | 0 |
அதிமுக கூட்டணி
| கட்சிகள் | போட்டி | வெற்றி | இழந்த தொகுதிகள் |
| அதிமுக | 172 | 47 | 125 |
| பாஜக+ | 33 | 1 | 32 |
| பாமக | 18 | 4 | 16 |
| அமமுக | 11 | 1 | 10 |
யாரை எதிர்த்து யார்? வெற்றி நிலவரம்
| vs | மொத்த சீட்டுகள் | திமுக கூட்டணி வெற்றி | அதிமுக கூட்டணி வெற்றி | தவெக வெற்றி |
| திமுக vs அதிமுக | 135 | 46 | 38 | 51 |
| திமுக vs பாஜக | 25 | 10 | 0 | 15 |
| திமுக vs மற்ற என்.டி.ஏ கூட்டணி கட்சிகள் | 16 | 4 | 4 | 8 |
| காங்கிரஸ் vs அதிமுக | 18 | 1 | 3 | 14 |
| காங்கிரஸ் vs பாஜக | 5 | 3 | 1 | 1 |
| மற்ற திமுக கூட்டணிகள் vs அதிமுக | 19 | 4 | 6 | 9 |
| இதர திமுக கூட்டணி கட்சிகள் vs அதிமுக கூட்டணி கட்சிகள் | 16 | 6 | 9 | 9 (தகவல் : தி இந்து) |
தனி தொகுதிகளில் எப்படி?
தனித் தொகுதிகளில், தமிழக வெற்றிக் கழகம் 24 இடங்களிலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 13 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 9 இடங்களிலும் வென்றுள்ளன.
மண்டலம் வாரியாக
| மண்டலம் | திமுக கூட்டணி | அதிமுக கூட்டணி | தவெக |
| மத்தி | 21 | 8 | 12 |
| சென்னை | 2 | 3 | 32 |
| வடக்கு | 14 | 16 | 11 |
| தெற்கு | 27 | 5 | 26 |
| மேற்கு | 9 | 21 | 27 (தகவல் : தி இந்து) |
நகரம்… கிராமம்
| திமுக கூட்டணி | அதிமுக கூட்டணி | தவெக | |
| நகர்ப்புறம் | 3 | 0 | 32 |
| இரண்டாம் நிலை நகரங்கள் | 8 | 6 | 29 |
| கிராமபுறம் | 52 | 39 | 38 |
| அடுத்தநிலை கிராம பகுதிகள் | 11 | 8 | 8 (தகவல் : தி இந்து) |
இந்தத் தேர்தல் மாற்றமானது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
