மாற்றத்தை தேடி ‘அலையாய்’ ஓட்டுப் போட்ட சென்னை வாக்காளப் பெருங்குடி மக்கள்?

Published On:

| By Mathi

சென்னை மாநகரில் வாக்குப் பதிவு 16% முதல் 29% வரை உயர்ந்துள்ளது.

மயிலாப்பூர், ராயபுரம், சைதாப்பேட்டை, திருவிநகர் தொகுதிகளைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் 80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களை ஒப்பிடும் போது சில தொகுதிகளில் பதிவான வாக்குகள் கூடுதலாக, குறைவாக உள்ளன.

ஆனால் தற்போதைய தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் என்பது மிக அதிகமானதாகவே இருக்கிறது.

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் இத்தகைய வாக்குப் பதிவு சதவீதம் உயர்வுக்கு என்ன காரணங்கள்?

பொதுவாக சென்னை மாவட்டம் போன்ற பெருநகரங்களை கொண்ட தொகுதிகளில் எம்.எல்.ஏக்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி சற்று அதிகமாகவே இருக்கும்.

ADVERTISEMENT

பிற மாவட்டங்களில் எம்.எல்.ஏ. என்பவர் தொகுதி மக்களுக்கு மிக முக்கியமானவர். தொகுதி மக்களுடன் நேரடியாக ‘நெருங்கிய’ தொடர்பில் இருக்கக் கூடியவர்.

பிற மாவட்டங்களில், பொதுமக்களின் வீடுகளில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகளில் எம்.எல்.ஏக்கள் ’தலையை’யாவது காட்டிவிட்டு போவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலான ஊரின் பொது நிகழ்வுகள்- திருவிழாக்கள் இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பங்கேற்புடன் நடக்கக் கூடியவை.

பிற மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதி மக்களின் பெரும்பாலான அடிப்படை தேவைகளுக்கு எம்.எல்.ஏக்கள் உதவி அவசியமானதாகவே இருக்கிறது.

ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களைக் கொண்ட மாவட்டத்தில் இத்தகைய பொதுமக்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்குமான ’உறவாடல்’ என்பது சற்று குறைவானதும் கூட.

சென்னை போன்ற பெருநகர தொகுதிகளில் மக்கள் தங்களது தேவைகளுக்கு நேரடியாகவே அரசு நிர்வாகத்தை- அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெறக் கூடியவர்களாகவே இருக்கின்றனர்.

இத்தகைய நகரங்களில் குடும்பம் மற்றும் பகுதி நிகழ்வுகளில் பெரும்பாலும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு இருப்பது இல்லை. சில பகுதிகளில் பெருந்திருவிழாக்களுக்கு மட்டுமே எம்.எல்.ஏக்கள் அழைக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கூட அந்த பகுதியின் முக்கியஸ்தர்களுக்கு நெருக்கமானவர்களாக இருப்பர்.

மேலும் மழை நீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை போன்ற சொற்பமான சிக்கல்களுக்குதான் எம்.எல்.ஏக்களை பெருநகரங்களில் மக்கள் தேடுகிற நிலைமையும் உள்ளது.

அப்படியான நிலையில், பொத்தாம் பொதுவாக “மாற்றம் வந்தால் நல்லாதான் இருக்கும்” என்கிற போக்கு வெகு இயல்பாகவே இத்தகைய பெருநகர வாக்காளர்களிடம் இருக்கவே செய்கிறது.

நமது மின்னம்பலம் நடத்திய கருத்து கணிப்பில் சென்னை மாவட்டங்களில் தேர்தலுக்கு புது வரவான விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்கு சராசரியாக 20 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன. நாம் மேலே சொன்ன, பொத்தாம் பொதுவான மாற்றத்தை விரும்புகிற மனநிலையைத்தான் மின்னம்பலம் கருத்து கணிப்பு வெளிப்படுத்தி இருந்தது.

இதனை உறுதி செய்யும் வகையில் வாக்குகளும் அதிகமான அளவு பதிவாகி இருக்கிறது.

சென்னை மாநகர வாக்காளப் பெருங்குடி மக்கள் நினைக்கிற மாற்றங்கள் நடக்குமா? இல்லையா? என்பது மே 4-ல் தெரியும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share