ADVERTISEMENT

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு… குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை – முழு விவரம்!

Published On:

| By christopher

2006 mumbai train blast : Bombay HC Acquits All 12 Accused

மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரின் தண்டனையையும் ரத்து செய்து, அவர்களை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 21) உத்தரவிட்டது. 2006 mumbai train blast : Bombay HC Acquits All 12 Accused

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் மின்சார ரயில்களில் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் மொத்தம் 189 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 800க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் (MCOCA) விசாரித்தது.

விசாரணையின் முடிவில், கமல் அன்சாரி, முகமது பைசல் அத்தவுர் ரஹ்மான் ஷேக், எஹ்தேஷாம் குதுபுதீன் சித்திக், நவீத் உசேன் கான் மற்றும் ஆசிப் கான் ஆகிய 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும்,

ADVERTISEMENT

தன்வீர் அகமது முகமது இப்ராஹிம் அன்சாரி, முகமது மஜித் முகமது ஷாஃபி, ஷேக் முகமது அலி ஆலம் ஷேக், முகமது சாஜித் மார்குப் அன்சாரி, முசம்மில் அத்தவுர் ரஹ்மான் ஷேக், சுஹைல் மெஹ்மூத் ஷேக் மற்றும் ஜமீர் அகமது லதியூர் ரஹ்மான் ஷேக் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் கடந்த 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர். எனினும் 2015ஆம் ஆண்டு முதல் அவர்கள் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்து வந்தன.

ADVERTISEMENT

இறுதியாக கடந்த ஆண்டு சில குற்றவாளிகள் வழக்கை விரைவாக முடிக்க வலியுறுத்தியதை அடுத்து, நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னாள் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், தற்போது மூத்த வழக்கறிஞருமான டாக்டர் எஸ். முரளிதர் ஆஜரானார்.

அவர் தனது இறுதி வாதத்தை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில், விசாரணையில் ஏற்பட்ட குறைபாடுகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூல அறிக்கைகளைப் பெறுவதில் புலனாய்வு அதிகாரிகளின் குறைபாடுகள் மற்றும் இதுபோன்ற பயங்கரவாத அல்லது உயர்மட்ட வழக்குகளில் நீதிமன்றங்களின் ஊடக விசாரணை மற்றும் நடத்தை ஆகியவற்றை சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக, “இந்த வழக்கில் பாரபட்சமான விசாரணை நடந்துள்ளது. நிரபராதிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 17 ஆண்டுகளாக இந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். அவர்கள் ஒரு நாள் கூட வெளியே வரவில்லை. அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி போய்விட்டது. பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கும் இதுபோன்ற வழக்குகளில், முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து, அதன்பின்னர் தான் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்கிறது.

இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். தொடர்ந்து ஊடகங்கள் வழக்கைச் செய்தி வெளியிடும் விதம், ஒரு நபரின் குற்றத்தை தீர்மானிக்கிறது.

12 பேரும் கடந்த 17 ஆண்டுகளாக எந்த சரியான ஆதாரமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத வழக்குகளில் விசாரணைகளில் தோல்வியடைந்த வரலாறு நம்மிடம் உள்ளது. ஆனால் இப்போது மிகவும் தாமதமாகவில்லை. நீதிமன்றம் அதை சரிசெய்ய முடியும்.

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல, அவரது குழந்தைகள், பெற்றோர்கள், உறவினர்கள் கூட சமூகத்தால் குற்றவாளிகளாக பார்க்கப்படுகிறார்கள். அதன்பின்னர் அவர்களின் வாழ்க்கை மிகவும் கொடூரமானது. யாரும் அவர்களை சரியாக நடத்த மாட்டார்கள். தயவுசெய்து இந்த காரணியையும் கருத்தில் கொள்ளுங்கள்” என முரளிதர் தனது அறிக்கையில் சமர்ப்பித்திருந்தார்.

தொடர்ந்து அரசு தரப்பின் இருவாதத்தையும் கேட்ட நீதிமன்ற அமர்வு, “‘நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல. ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்து, 12 பேரையும் விடுதலை செய்கிறோம்” எனத் தீர்ப்பளித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share