பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளி மேக் ரூதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன்.
கடந்த 5 மாதமாக விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் இரு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
மேக் ரூதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து தொடங்கியது.
உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான ஷார்க் என்கின்ற விமானத்தில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக இரண்டு இருக்கைகள் உடைய இந்த விமானத்தில் மேக் தடையின்றி பறப்பதற்கு வசதியாக, இரண்டாவது இருக்கைக்கு பதிலாக கூடுதல் எரிபொருள் டேங்குடன் மாற்றியமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் மூன்று மாதங்களில் இந்த சாதனை பயணத்தை முடிக்க மேக் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் என அவரது வழியில் எதிர்பாராத பல தடைகள் வந்ததால் பயணம் நீண்ட காலம் நீடித்தது.
மேலும், பல்வேறு நாடுகளில் மேக் பயணித்த ஒற்றை விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் அவரது சாதனை பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.
எனினும் தன் முயற்சியில் சற்றும் பின்வாங்காத மேக், கடந்த 5 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றி வந்த மேக் ரூதர்போர்ட் நேற்று பல்கேரியா தலைநகர் சோபியாவில் விமானத்தை தரையிறக்கி சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.
அவரை வரவேற்பதற்காக குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் கரவொலிகளை எழுப்பியும், ஆரவாரம் செய்தும் மேக் ரூதர்போர்டுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலகை சுற்றிய இளம் விமானி!
இந்த சாதனை பயணத்தின் மூலம் இளம் வயதில்(17) தனியாளாக உலகை சுற்றிவந்தவர் மற்றும் அல்ட்ராலைட் எனும் சிறு விமானத்தில் பயணம் செய்த இளம் விமானி என்ற இரு கின்னஸ் சாதனைகளை மேக் ரூதர்போர்ட் படைத்துள்ளார்.
மேலும், 18 வயதில் தனியாளாக உலகை சுற்றி சாதனை படைத்த பிரிட்டனைச் சேர்ந்த டிராவிஸ் லட்லோவின் சாதனையை முறியடித்துள்ளார்.
விமானிகளின் குடும்பத்தில் பிறந்த மேக், 2020-ம் ஆண்டு தனது 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்று உலகின் இளம் வயது விமானி என்கிற பெருமையை பெற்றார்.
தற்போது 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
