தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024 – 25 ஆம் ஆண்டிற்கான அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அந்த வகையில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாடு மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் சுமார் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1. தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை
ஆகியவை 2 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில், அவற்றை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
2. கடந்த ஒரு நூற்றாண்டுகளில் பல்வேறு உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ்நூல்களை விட இரண்டு மடங்கு தமிழ்நூல்களை தற்போது இரண்டே ஆண்டுகளில் மொழிபெயர்த்திட இவ்வரசு முன்முயற்சி எடுத்துள்ளது சூறிப்பிடத்தக்கது. மேலும், உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 1௦௦ பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இவ்வாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் இம்முயற்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
3. அவர் வகுத்துத் தந்த பாதையில் பயணித்து, தற்போது, கலைஞர் நூற்றாண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகம் இதுவரை 340 மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.
4. துரிதமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பரப்பில் தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழிச் செயலாக்கம், பெருந்திரள் மொழி மாதிரிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்திட இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
5. தமிழ்மொழியின் வளம், தமிழரின் தொன்மை குறித்து எதிர்காலத் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழ்நாடெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
6. தமிழ்நாட்டில் பேசப்படும் செளராஷ்டிரா, படுக மொழிகளையும் தோடர், கோத்தர், சோளகர், காணி, நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மூலம் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
7. அந்த வகையில் தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் – கீழடி, விருதுநகர் மாவட்டம் – வம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் – பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் – திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் – கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் – மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – சென்னானூர் என மொத்தம் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச்சுவடுகளைத் தேடி கேரள மாநிலத்திலுள்ள முசிறி (பட்டணம்), ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர், ஆந்திர மாநிலத்திலுள்ள (வெங்கி, கர்நாடகத்திலுள்ள மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேற்கூறிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
8. தேசிய கடல்சார் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, கொற்கை மற்றும் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான அழகன்குளம் ஆகிய பகுதிகளின் கடலோரங்களில் 65 இலட்சம் ரூபாய் செலவில் முன்கள ஆய்வும் அதனைத் தொடந்து ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.
9. கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும், எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில், கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
10. மேலும், நவீன மரபணுவியல்தொழில்நுட்பங்களைக் கொண்டு தமிழ்மக்களின் மரபணுத் தொன்மை, இடப்பெயர்வு, வேளாண்மை, பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கண்டறிய மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல்மரபணுவியல் ஆய்வகம் மூலம் தொல்மரபியல் ஆய்வினை மேற்கொள்வதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
11. சிந்துவெளிப் பண்பாடு குறித்து முதன்முதலில் இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் அவர்களால் 1924-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் சிந்துவெளிப் பண்பாட்டு நூற்றாண்டுக் கருத்தரங்கம், பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா