10 நாட்களில் 21 மீனவர்கள், 102 படகுகள்… இலங்கை வசம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்த பத்து நாட்களுக்குள் மொத்தம் 21 மீனவர்களையும், 102 படகுகளையும் இலங்கை அரசு சிறை பிடித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள ‘பாக் ஜலசந்தி’யைப் பயன்படுத்துவதில் இரு நாட்டு மீனவர்களுக்கும், இடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. கச்சத்தீவை அண்டிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை பிடித்துச் சென்று, இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களின் படகுகளையும் கொடுப்பதில்லை. தமிழகத்தில் இந்தாண்டு மீன் பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிந்தது. அந்த இடைப்பட்ட 45 நாட்கள் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த தடைக்காலம் முடிந்து வழக்கம்போலவே மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல ஆரம்பித்த அடுத்த சில தினங்களிலேயே கைது நடவடிக்கையை வழக்கம் போலவே இலங்கை அரசு தொடங்கியது. இந்நிலையில், சிங்கம் என்பவருக்குச் சொந்தமான படகில் மீனவர்கள் 6 பேர், நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, எல்லை தாண்டி கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாகக் கூறி அந்த 6 பேரையும் இலங்கைக் கடற்படையினர், படகுடன் சிறை பிடித்தனர். இதையடுத்து, யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கின்றனர். கடந்த பத்து தினங்களுக்குள் மொத்தம் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 102 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் இலங்கை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோருகின்றனர்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share