வரலாறுகாணாத மழை, அடுத்து வரலாறுகாணாத வெயில்!: தாங்குமா சென்னை? – அன்பு முருகன்.

Published On:

| By Balaji

”இந்த மழை போய்த்தொலஞ்சு, வெயிலப் பாக்கமாட்டமா!” என்பதுதான் போன மாத சென்னை மக்களின் மனநிலை.

ஆனால், இன்னமும் முப்பது நாட்கள் முழுமையாகக் கடந்துவிடவில்லை. அதற்குள் ‘’இப்பமே வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே! ஏப்ரல், மே மாசத்துல நம்மள எரிச்சுப் போடுமோ?” – இது, இப்போது கேட்கத் துவங்கியிருக்கும் சென்னைவாசிகளில் குரல்!

ADVERTISEMENT

மழை வந்தால் வெயிலைத் தேடுவதும், வெயில் வந்தால் மழையைத் தேடுவதும் மனித இயல்பு. ஆனால், நாம் விரும்பும் மழையும், வெயிலும் இப்போதெல்லாம் வருவதே இல்லை!

பருவமழை பொய்த்து அதிக மழை, அதிக வெப்பம்! வருடக்கணக்காய் மழையே இல்லாத நிலை. இதுதான் இன்று, உலகம் எதிர்கொண்டிருக்கும் காலநிலை மாறுபாடு. ஆண்டு முழுவதும் அதிக கோடைகாலத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகள், மேலும் மேலும் வெப்ப நாடுகளாய் மாறிக்கொண்டிருக்கிறது என்று அபாயமணி அடிக்கிறது ஆய்வுகள்.

ADVERTISEMENT

2015-அதிக வெப்பம், அதிக மழை

சமீபத்தில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்ட அறிக்கையும் இதையே தகவல்களாக, புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2015ம் ஆண்டு உலக அளவில் வரலாற்றில் இதுவரை காணாத அதிவெப்பம் கொண்ட ஆண்டாக இருந்துள்ளதை உணர்த்தியுள்ளது. இதில், இந்திய நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த ஆய்வுக்காக, உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் 6300 வானிலை ஆய்வு மையங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்துள்ளது நாசா. 1951ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு உலகின் ஆண்டு சராசரி வெப்பநிலையைக் கணக்கிட்டது. மற்ற வானிலை ஆய்வு மையங்களிலிருந்து பெற்ற தகவல்களை இதனுடன் ஒப்பிட்டுப்பார்த்ததில், கடந்த 2015ம் ஆண்டின் வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், அதிக மழை கொட்டித்தீர்த்த ஆண்டாகவும் 2015 பதிவாகியுள்ளது. தொழில்புரட்சி நடந்தபின் அதாவது, கடந்த 250 ஆண்டுகளில் இல்லாத அளவு உலக சராசரி வெப்பஅளவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2000வது ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகள் மிக அதிக வெப்பநிலையைக் கொண்ட ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த காலநிலை மாற்றத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகாத பகுதி என்று உலகில் எதுவுமே இல்லை என்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கிறது. இந்தக் காலகட்டத்தில், உலகளவில் பின்லாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் வரலாறுகாணாத வெப்பத்தை அனுபவித்துள்ளன.

இந்தியாவில் வெப்பம்

இந்தியாவில் கடந்த 200 ஆண்டுகளில், சராசரி வெப்பநிலையானது 2.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. வெப்பநிலை குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய கடந்த 135 ஆண்டுகளில், 2015ம் ஆண்டே அதிக வெப்பம்தகித்த ஆண்டாக உள்ளது. ஆனால், அதைவிட வருகிற 2016ம் ஆண்டு அதிக அளவான வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வுகள்.

நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையின் சராசரி வெப்பநிலை, கடந்த 1891ம் ஆண்டில் இருந்து மெல்ல அதிகரித்து, ஆண்டு சராசரி வெப்பநிலையானது 2.4 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. தலைநகரான டெல்லியின் வெப்பநிலை 1930ம் ஆண்டில் இருந்து உயர்ந்து, சராசரி ஆண்டு வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த பெர்கெலே எர்த் டாட் ஆர்க் என்ற தனியார் இணையதளம் நடத்திய ஆய்வொன்றில், இந்தியாவின் வெப்பநிலை கடந்த 200 ஆண்டுகளில் 2.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிவியலாளர்களில் ஒரு பகுதியினர், இந்தக் காலநிலை மாற்றத்துக்கு இயற்கையின் பங்களிப்பே அதிகம் காரணம் என்று வாதிடுகின்றனர். கடந்த ஆண்டு, பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட ’எல்நினோ’ என்ற இயற்கை காலநிலை நிகழ்வே, 2015ம் ஆண்டில் உலகின் பல பகுதிகளில் வரலாறுகாணாத வெப்பம் மற்றும் மழை கொட்டக் காரணம் என்று கூறியுள்ளனர். இந்த ‘எல்நினோ’ பாதிப்பு, இந்தியாவின் தெற்கு முதல் வடக்கு வரை அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வரலாறுகாணாத மழை பெய்தது. வட மாநிலங்களில் குறைவான மழையையும், அதிக அனல்பறக்கும் வெப்பத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் அதேநேரத்தில், இந்த 2015ம் ஆண்டுக்கான மாற்றத்துக்கு வேண்டுமானால் எல்நினோ காரணமாக இருக்கலாம், ஆனால், கடந்த 2000வது ஆண்டு முதல் பல ஆண்டுகள் அதிக வெப்பம்தகித்த ஆண்டுகளாக இருந்ததற்கு, மனிதச் செயல்பாடுகளே காரணம் என்று மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் உறுதியாக அடித்துக் கூறியுள்ளனர். காடுகளை அழித்தது, அதிக அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் போன்ற பல்வேறு மனிதச் செயல்பாடுகளே இதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது உலகளவில் நிலப்பரப்பு அதிகம் உள்ள வடதுருவப் பகுதிகளிலேயே வானிலை ஆய்வு மையங்கள் அமைந்துள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட தரவுகள்மூலமே, இந்த ஆய்வு முடிவுகள் நமக்குக் கிடைத்துள்ளன.

ஆனால், அதிக கடல்பகுதி கொண்ட தென்துருவத்தின் தற்போதைய பருவநிலை மாற்றம் குறித்த தகவல்கள் இல்லை என்பதையும், கடல் வெப்பநிலை உயர்வு கணக்கிடப்படவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால், கடலில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. மேலும், இதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சென்னை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

இந்தியாவில் வட மாநிலங்கள் அதிகக் குளிர், அதிக வெப்பம் என சிரமப்பட்டபோதும்கூட சென்னை, அளவுகடந்த காலநிலை மாறுபாடுகளுக்கு உள்ளாகவில்லை. கடைசியாக, 1910ல் அதிக வெப்பம் பதிவானதாகவும் அதன்பின்னர், 2003ல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை சென்னை எதிர்கொண்டதே மிக மோசமான வெப்பமாக இருந்தது. வெப்பம் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை சென்னையில் அதிகரித்துச் செல்கிறது. பொதுவாக, குளிர்காலம் எனப்படும் இம்மாத ஜனவரியில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. இப்போதே நிலைமை இப்படியென்றால், வரவிருக்கும் கோடை வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு வெப்ப வெயில் சென்னையை தாக்கப்போகிறது. வரலாறுகாணாத மழை ஏற்படுத்திய பேரிடரில் இருந்து சென்னை இன்னும் முழுமையாக மீளாதநிலையில் வரவிருக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறோம்!…

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share