சிறப்புக் கட்டுரை: தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு குறைவு! – நமிதா பந்தாரே

By Balaji

|

Published on 10 Aug 2017, 12:00 AM

கடந்த 2017ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஆண்களுக்கான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 9 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆனால், 24 லட்சம் பெண்கள் தங்களின் பணியில் இருந்து விலகியுள்ளனர். இந்தத் தகவலை இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. “வேலையின்மை அதிகரிக்கையில் மட்டுமே பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று இம்மையத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.

விளம்பர நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், கட்டுமானப் பணிமனைகள், கடைகள், உணவகங்கள், வயல்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், விமானங்கள், டாக்ஸிகள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். பணிகளைத் துறக்கும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டிவிட்டது. 2004ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை மொத்தம் 1.96 கோடி (கிட்டத்தட்ட 2 கோடி) பெண்கள் தங்களின் பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியப் பெண்களில் வெறும் 27 சதவிகிதம் பெண்களே வேலையுடன் இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 2013ஆம் ஆண்டுக்கு முந்தைய இருபது ஆண்டுகளில், தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு 34.8 சதவிகிதத்தில் இருந்து 27 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த படிக்காத பெண்கள், படித்த பெண்கள் ஆகிய இரு சாராரின் பங்கேற்பும் அதிகமாகக் குறைந்துவிட்டதாக உலக வங்கியின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த குறியீடுகள் அதிகரிப்பதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.

தாராளமயமாக்கத்துக்குப் பிறகே இந்தச் சரிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தாராளமயத்தால் வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தில் அனைத்து சாராருக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்க வேண்டுமே தவிர, குறைந்திருக்கக் கூடாது. அதிகமான பெண்கள் தங்களின் பணிகளில் இருந்து விலகி வந்த காலத்தில்தான், 2.43 கோடி ஆண்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். இந்தத் தகவல் உலக வங்கியின் [அறிக்கையில்](http://documents.worldbank.org/curated/en/559511491319990632/pdf/WPS8024.pdf) தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு 2005ஆம் ஆண்டில் 36.9 சதவிகிதமாகவும், 2010ஆம் ஆண்டில் 28.6 சதவிகிதமாகவும், 2013ஆம் ஆண்டில் 27 சதவிகிதமாகவும், 2016ஆம் ஆண்டில் 23.7 சதவிகிதமாகவும் தொடர்ந்து குறைந்துள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் சேரும் பெண்களின் விகிதம் 100 சதவிகிதமாக இருந்துள்ளது. ஆனால், தொடக்கப் பள்ளியில் படிக்கும் பெண்களின் விகிதமோ 2002ஆம் ஆண்டில் 7.5 சதவிகிதமாகவும், 2003ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. விகிதம் அதிகரித்துள்ளது என்றாலும்கூட, ஏராளமான பெண்கள் தங்களின் கல்வியை நிறுத்திக்கொள்வதையே இந்தக் குறியீடுகள் காட்டுகின்றன.

ADVERTISEMENT

படித்துப் பட்டம் பெற்ற கிராமப்புறப் பெண்களில் 67 சதவிகிதம் பேர் வேலைக்குச் செல்வதில்லை. நகர்ப்புறப் பட்டதாரி பெண்களில் 68.3 சதவிகிதம் பேருக்குச் சம்பளத்துடனான வேலைகள் கிடைப்பதில்லை. இந்தத் தகவலை ஐக்கிய நாடுகள் முன்னேற்றத் திட்டத்தின் [அறிக்கை](http://www.in.undp.org/content/dam/india/docs/poverty/Womens%20Voices%20Employment%20and%20Entrepreneurship%20In%20India%20Report.pdf?download) தெரிவிக்கிறது.

ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் பங்கேற்றால், 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60 சதவிகிதம் உயரும். அதாவது 2.9 லட்சம் கோடியாக உயரும் என்று மெக்கின்சி குளோபல் நிறுவனத்தின் [தகவல்](http://www.mckinsey.com/global-themes/employment-and-growth/how-advancing-womens-equality-can-add-12-trillion-to-global-growth) தெரிவிக்கிறது. தற்போது இந்தியப் பொருளாதாரத்தில் 17 சதவிகிதம் பெண்களே பங்கேற்கின்றனர். இது சர்வதேச சராசரி விகிதமான 37 சதவிகிதத்துக்கும் குறைவானதாகும்.

பணியிடங்களில் இருந்து பெண்களை ஒதுக்கிவைக்கும் பிரச்னைகள் என்னவென்பதைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ஓர் ஆண் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவரால் சுதந்திரமாகச் செல்ல முடியும். ஆனால், ஒரு பெண் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அவரின் தந்தை, தாய், சகோதரர், கணவன் ஆகியவர்களிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. சில ஊர்களில் கிராமப் பஞ்சாயத்துகளின் அனுமதியைக்கூடப் பெற வேண்டியதாக இருக்கிறது.

இந்தியா முழுவதிலும் ஆணாதிக்கம் கொண்ட கலாசார மற்றும் சமூக அணுகுமுறைகள் இன்னும் இருக்கின்றன. பல வடமாநிலங்களிலும் ஒரு பெண் வேலைபார்த்தால், அது அவரின் கணவனுக்கு அவமானம் என்றே கருதப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் பீகார், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாக இருக்கிறது.

குடும்பப் பொறுப்பு, வீட்டு வேலை ஆகியவை மற்றொரு பிரச்னை. பெண்கள் வேலைகளை ஏற்க மறுக்கின்றனர் அல்லது குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக வேலையில் இருந்து விலகிவிடுகின்றனர் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் குழு மேற்கொண்ட [ஆய்வில்](http://epod.cid.harvard.edu/files/epod/files/epod_skillfinal.pdf) தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் என்றால் இப்படித்தான் என்று சமூகக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு, இந்தக் கட்டுப்பாடுகள் பெண்கள்மீது அவர்களின் பெற்றோர் அல்லது கணவரால் திணிக்கப்படுகின்றன. பெண்கள் வேலையில் சேருவதற்கு இதுவும் ஒரு தடை.

பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு அவர்களின் குடும்பத்தினர் அனுமதித்தாலும்கூட, அதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பணியிடம் வீட்டுக்கு அருகே இருக்கிறதா, சமையல் முதலான வீட்டுப் பணிகளைச் செய்வதற்கு ஏதுவான பணி நேரம் உள்ளதா, குழந்தைகளைத் தூங்கவைக்க ஏதுவான பணி நேரம் உள்ளதா, குறைந்த விலையில் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றனவா போன்றவற்றைப் பொறுத்தே பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண்களுக்கான பாதுகாப்பும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பொது இடங்களில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பணியிடங்களில் பெண்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக, பெண்களுக்காகத் தனி விடுதி வசதி, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கான வசதி போன்றவை மிகவும் குறைவாகவே உள்ளன.

“பெண்களைப் பணியில் அமர்த்த வேண்டுமென்றால், அவர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கான வசதியை நிறுவனம் அமைத்துத் தர வேண்டும் என்பது அரசாங்கத்தின் விதிமுறை. எனவே, பெண்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்துவிடுகின்றனர்” என்று பிரதம் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் மேதா உனியல் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே பெண்களுக்கென்று பாரம்பர்யமாக ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளைப் பெண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். அழகு நிலையங்கள், செவிலியர்கள் போன்ற பணிகளைப் பெண்கள் தேர்வு செய்துகொள்கின்றனர்.

தொலைத்தொடர்பு, வங்கித் துறை போன்றவை வேகமாக வளர்ந்துவரும் துறைகளாகவும் ஆண்களை அதிகமாக பணியில் அமர்த்தும் துறைகளாகவும் இருக்கின்றன. இந்தத் துறைகளில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தொலைத்தொடர்பு துறையில் 83.84 சதவிகிதம் ஊழியர்கள் ஆண்கள். வங்கித் துறை, நிதிச் சேவைகள், காப்பீட்டுத் துறை ஆகியவற்றில் 78.79 சதவிகிதம் பணியாளர்கள் ஆண்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு, எஃகு மற்றும் கனிமங்கள் போன்ற மையத் துறைகளில் 74.75 சதவிகிதம் பணியாளர்கள் ஆண்கள். இந்தத் தகவல்களை 2017ஆம் ஆண்டின் [இந்தியா ஸ்கில்ஸ் அறிக்கை](https://drive.google.com/file/d/0B5UvNXvO6iseXzUyQW81bUNPVkx5czFyd2pFMUtMMDFrTHhB/view) தெரிவிக்கிறது. பெண்களுக்கான பாரம்பர்ய வேலைகளைத் தேர்ந்தெடுக்கவே பெண்களும் விருப்பம் காட்டுகின்றனர்.

பெண்களுக்குத் தேவையான பயிற்சியளிப்பதும் முக்கியத் தேவையாக உள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் 40 கோடிப் பேருக்கு பயிற்சி அளிப்பது ஸ்கில் இந்தியா மிஷனின் இலக்கு.

இந்தியாவில் எல்லாப் பெண்களுமே பணிபுரிகின்றனர். விறகு கொண்டுவருதல், தண்ணீர் கொண்டுவருதல், சமையல், சுத்தப்படுத்துதல், குழந்தைகள் மற்றும் முதியோரை கவனித்துக்கொள்ளுதல் போன்ற வேலைகளே இதில் அதிகம். ஆனால், இந்த வேலைகளுக்குச் சம்பளமோ, அங்கீகாரமோ வழங்கப்படுவதில்லையே. இதனால் அவர்களுக்கு என்ன பயன்?

நன்றி: [இந்தியா ஸ்பெண்ட்](http://www.indiaspend.com/cover-story/why-indian-workplaces-are-losing-women-our-nationwide-investigation-begins-53927)

தமிழில்: அ.விக்னேஷ்,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel