என்.எஸ்.ஜி. என்பது அணுஎரிபொருள் வழங்கும் 48 நாடுகளின் கூட்டமைப்பாகும். 1974ல் இந்தியா ‘பொக்ரான் அணுகுண்டு’ சோதனை செய்ததற்கு எதிர்வினையாகத்தான் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக வல்லரசுகளும், அணுசக்தி பயன்பாடுள்ள தேசங்களும் இதில் உறுப்பினராக உள்ளன.
அணுசக்திக்கான தோரியம், யுரேனியம் பயன்பாடு, அணுசக்தி தொழில்நுட்பங்களின் பகிர்வு, அணுஆயுதப் பெருக்கம் உள்ளிட்ட பல அம்சங்களை இந்த நாடுகளின் கூட்டமைப்பு நெறிமுறைப்படுத்துகிறது. இதில் உறுப்பினராக அணுஆயுதப் பெருக்கத்துக்கு எதிரான உறுதியை அளிக்கும் ஒப்பந்தத்தில் (என்.பி.டி) கையெழுத்திட வேண்டும். இதுதான் உறுப்பினராவதற்கான முக்கியமான வழிமுறை, விதியாகும்.
ஆனால், இது பாரபட்சமானது என்று இந்தியா கையெழுத்திட மறுக்கிறது. ஏனென்றால், வளர்ந்த நாடுகள் தேவையான அணுசக்தியைப் பெற்றுள்ளன. ஆனால், வளரும் நாடுகள் அந்த ஆற்றலை நுகர்வது இந்த ஒப்பந்தத்தால் தடைபடும் என்று இந்தியா நினைக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் உள்ளன.
ஆரம்பத்தில் இந்தக் குழுமத்தில் இடம்பெறுவதை இந்தியா முக்கியமானதாகக் கருதவில்லை. 2008ம் ஆண்டு அமெரிக்காவுடன் அணுசக்தி வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதுதான் இந்தியாவுக்கு இதில் ஆர்வம் பிறந்தது. மேலும், அணுசக்திப் பயன்பாட்டை வழங்கும் எம்.டி.ஆர்.சி, என்.எஸ்.ஜி, வாஸென்னர், ஆஸ்திரேலியக் குழுமம் என எல்லா அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் முயற்சித்தது. இதனால், இந்தப் பணிகள் சுணக்கம் அடைந்தன. இந்நிலையில், கடந்த ஓராண்டாகத்தான் இந்தியா என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராவதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கியது. 2008ம் ஆண்டு அணுஆயுதப் பெருக்கத்துக்கு எதிரான ஒப்பந்தம் குறித்து ராஜிய அளவிலான ஆதரவை இந்தியா அளிப்பதாகக்கூறி, அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் கடிதம் எழுதினார்.
என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராவதற்கு 48 நாடுகளும் ஒருமித்த கருத்துடன் ஆதரவளிக்க வேண்டும். ஒரு நாடுகூட ஆதரவை மறுக்கக்கூடாது. இந்நிலையில், சீனாவின் ஆதரவு முக்கியம் என்பதால்தான் கடந்த மே 24ம் தேதி அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சீனா பயணம் செய்தார். அந்நாட்டுத் தலைவர்களை வலியுறுத்தினார். இதற்கிடையில், தென் சீனக்கடல் விவகாரம் முற்றியது. ஆனால், சீனாவை அதிருப்திக்குள்ளாக்க வேண்டாம் என்றுதான், சில தினங்களுக்குமுன்னர் மோடி அமெரிக்கா சென்றபோது, ஒபாமா -மோடி செய்தியாளர் சந்திப்பில் சீனாவைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.
மேலும், சீன சான்றோர்கள் இந்தியா வருவதற்கான விசாக்கள் பெறுவதை எளிதாக்குவது உள்ளிட்ட பல அணுசரணையான நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்தது. இந்நிலையில், 2016, ஜுன் 9,10 தேதிகளில் இந்தியாவின் விண்ணப்பம்குறித்து என்.எஸ்.ஜி. பேரவையின் வியன்னா கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சீனா இந்தியாவை நேரடியாக எதிர்க்காமல் ‘வழிமுறைகள் விதிகளை’ச் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்தது. சீனாவைப்போலவே, நியூசிலாந்து, துருக்கி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியா உறுப்பினராவதை எதிர்க்கின்றன.
பிரான்ஸ் மட்டும்தான் அணுஆயுதப் பெருக்கம் தொடர்பான என்.பி.டி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவும் உறுப்பினராக விரும்புகிறது. ஆனால், இந்தக் குழுமத்தை நிறுவிய நாடுகளில் பிரான்சும் ஒன்று என்பதால், பிரான்ஸ் இடம்பெறுவது சர்ச்சையாகவில்லை என்றும், பிரான்ஸுக்கான நிலைப்பாடு இந்தியாவுக்குப் பொருந்தாது என்றும் சீனா சொல்கிறது. என்.பி.டி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை அடிப்படையாகவைத்தே, உறுப்பினராவதற்கான ‘வழிமுறைகள் விதிகளை’ சுட்டிக்காட்டி சீனா இந்தியாவுக்கு எதிராக நிற்கிறது. இதே காரணத்திற்காக, இந்தியா உறுப்பினராவதை எதிர்த்த மற்ற சில நாடுகள், அமெரிக்காவின் ஆதரவுக்குப்பின்னர் இந்தியாவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டன.
ஜுன் 9, 10 பேரவைக் கூட்டத்துக்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி இந்தியாவுக்கு ஆதரவளிப்பதை எதிர்க்கவேண்டாம் என குழுமத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார். தற்போது அமெரிக்கா, ஜப்பான், மெக்ஸிகோ, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவின் விண்ணப்பம் குறித்து ‘முடிவு எட்டப்படாத’ நிலையில் பேரவைக் கூட்டம் முடிந்துள்ளது. ஜுன் 24ம் தேதி சியோலில் நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் இந்தியாவின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், ஜுன் 23, 24ல் சீனாவில் ‘ஷாங்காய் ஒருங்கிணைந்த குழுமத்தின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இது அரசியல், பொருளாதார, ராணுவ ஒருங்கிணைப்புக்கான ஐரோப்பிய – ஆசிய கூட்டமைப்பாகும். இதில் உறுப்பினராவதற்காக இந்தியா விண்ணப்பித்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அநேகமாக, மோடி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும், அப்போது சீன அதிபர் ஜூ ஜிங்பிங்-கிடம் என்.எஸ்.ஜி. விவகாரத்தில் ஆதரிக்குமாறு ‘லாபி’ செய்வார் என்று ராஜிய விவகாரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 2008ம் ஆண்டு, அமெரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டபோது, சில அழுத்தங்களுக்குப்பிறகு சீனா எப்படி ஆதரித்ததோ, அதேபோல் இப்போதும் ஆதரிக்கும் என இந்தியா நம்புகிறது.
பயன்கள்:
1. 2008 அமெரிக்க ஒப்பந்தத்துக்குப் பிறகு யுரேனியம், புளூட்டோனியம் போன்றவற்றை அணுசக்திக்குப் பயன்படுத்த ஏதுவாக மாற்றத் தேவையான ‘பிராசஸ்’ செய்யும் தொழில்நுட்பங்களை இந்தியா பெற்றது. என்.எஸ்.ஜி-யில் உறுப்பினரானால் மீதமுள்ள 47 நாடுகளிடமும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பெறமுடியும்.
2. உலகிலேயே அதிக தோரியம் உள்ள 4வது நாடு நமீபியா. நமீபியாவிடம் இருந்து தோரியம் பெற 2008ல் இந்தியா ஒப்பந்தம் போட்டது. ஆனால், நமீபியா உறுப்பினராக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு விதிகளால் பெறமுடியவில்லை. என்.எஸ்.ஜி-யில் உறுப்பினரானால் இந்தத் தடை நீங்கும்.
3. வணிகரீதியாலான அணுசக்தி உற்பத்தி, விற்பனை, அணுசக்தி தொழில்நுட்ப வடிவமைப்புகள் வியாபாரத்தில் ஈடுபட முடியும். இது, இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
4. அணுசக்திக் கலன்கள், கருவிகள் உள்ளிட்டவற்றை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் கொண்டுவர முடியும். அந்நியச் செலாவணி, முதலீடு, வர்த்தகம் உயரும்.
5. இந்தியா சுற்றுச்சூழல்சார்ந்து தன் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 40% அளவில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை எட்டும்நோக்கில் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராவது உதவும்.
6. பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உறுப்பினராக நினைக்கிறது. இதை சீனா ஆதரிக்கிறது. பாகிஸ்தானுக்குமுன்னர் இந்தியா உறுப்பினராகிவிட்டால், பாகிஸ்தான் உறுப்பினராவது தடுக்கப்படும்.
-விவேக் செ
