’’தேர்தல் தேதி அறிவிப்பு ஒரு சில தினங்களில் வந்துவிடும். ஆனாலும் ஜெயலலிதா அதைப்பற்றி கவலைப்படவில்லை. அமைச்சர் சின்னையாவின் பதவியைப் பறித்துவிட்டார். சின்னையா பதவிப் பறிப்புக்கு முக்கிய காரணமே என்வழியாக பரவிய ஆடியோதான்!’’ என்றபடியே ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப்.
‘‘அமைச்சர் சின்னையாவுக்கு எதிராக நங்கநல்லூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்து போராடி வந்தார். சரவணனின் நண்பர் ஒருவருக்கு பதவி வாங்கித்தருவதாகச் சொல்லி பணமும், நகையும் வாங்கிக் கொண்டார் என்பதுதான் புகார். சரவணனும், சின்னையாவும் பேசும் ஆடியோதான் என்வழியாக ஊரெல்லாம் சுற்றி வந்தது. அந்த ஆடியோ, அதிமுக தலைமைக்கும் போயிருக்கிறது. அதுமட்டுமல்ல… சரவணனிடம் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியை மட்டும் சின்னையா திருப்பித் தந்ததாகவும், அந்த நோட்டுகளில் சின்னையா கைரேகை இருந்ததை ஆதாரத்துடன் சரவணன் முதல்வருக்குக் கடிதமாக எழுதினார் என்றும் சொல்கிறார்கள். நடவடிக்கை பாய்ந்துவிட்டது.
சுகாதாரத்துறை அமைச்சரான புதுக்கோட்டை விஜயபாஸ்கரின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோயிருக்கிறது. அதற்கு சொல்லப்படும் காரணங்கள் இதுதான். கறம்பக்குடியைச் சேர்ந்த ஒன்றியத் தலைவர் ஒருவரை, சாதிப் பெயரைச்சொல்லி திட்டியதாக விஜயபாஸ்கர்மீது புகார் கிளம்பியது. முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சருக்கு எதிராகக் களமிறங்க…விவகாரம் கள்ளர்- முத்தரையர் பிரச்சினையாக மாறியது. முத்தரையர் சமுதாயம் அதிகம் உள்ள மாவட்டம் என்பதால், விஜயபாஸ்கர்மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார் என்ற புகாரும் விஜயபாஸ்கர்மீது உண்டு. ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே இவர் பதவியும் போகும் என எதிர்பார்த்தார்கள். சில நாட்கள் தாமதமாக நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையால் மறுபடியும் தங்களுக்கு சீட் கிடைக்குமா? என்ற பயத்தில் தவிக்கிறார்கள் சின்னையாவும், விஜயபாஸ்கரும்.’’
ஃபேஸ்புக் பிஜேபி தகவல்களுடன் சைன் இன் ஆனது. ‘’விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுப்போன பிஜேபி-யின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் ஜவ்டேகர் நேற்று காலை மீண்டும் சென்னை வருவதாக தமிழிசை சொல்லியிருந்தார். ‘இன்று ஜவ்டேகர் சென்னை வரவில்லை. அவரது வருகைபற்றி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று பிஜேபி-யில் இருந்து மறுபடியும் அறிக்கை வந்தது. திமுக-வுடன் விஜயகாந்த் கூட்டணி என்ற செய்தி பாஜக வட்டாரத்தை படபடப்புக்குள்ளாக்கிவிட்டது. இன்று காலை யாருக்கும் சொல்லாமல் திடீரென சென்னைக்கு வந்தார் ஜவ்டேகர். ‘இது தனிப்பட்ட வருகை!’ என்று சமாளித்தது பிஜேபி. ஜவ்டேகர் சென்னை வந்த நேரத்தில் தமிழிசை திருப்பதியில் இருந்தார்.
பிரகாஷ் ஜவ்டேகர் என்ற தன் முழுப் பெயரை குறிப்பிடாமல் பிரகாஷ் என்ற பெயரில் டிக்கெட் புக் செய்திருந்தார் ஜவ்டேகர். காலை 10.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் 9W735 விமானத்தில் வந்து இறங்கியவரை பிஜேபி-யைச் சேர்ந்த ராத்மா சங்கர் என்பவர் அழைத்துவரப் போயிருக்கிறார். மத்திய அமைச்சர் என்பதால் புரொட்டோகால்படி, போலிஸாரும் அதிகாரிகளும் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால், ஜவ்டேகர் பயணிகள் வெளியேவரும் வழியில் வராமல், உள்ளேபோகும் வழியில் வெளியே வந்திருக்கிறார். அங்கே தயாராக இருந்த வேறு ஒரு காரில் புறப்பட்டு ஏர்போர்ட் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்குப் போயிருக்கிறார் ஜவ்டேகர். அங்கே, சற்றுநேரம் ஓய்வெடுத்தவர் ஹோட்டலின் பின்வாசல் வழியாகக் கிளம்பி சாலிகிராமத்துக்குப் போனார். விஜயகாந்த் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளியிருக்கும் சுதீஷ் வீட்டுக்குப் போயிருக்கிறார் ஜவ்டேகர். அங்கேதான் பிரேமலதாவும் இருந்தார். அவர்களிடம் ஜவ்டேகர் பேசியதாகச் சொல்கிறார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அதனால் உடனடியாக அங்கிருந்து கிளம்பியவர், நேராக ஏர்போர்ட் வந்து மாலை 4.45 மணி பிளைட் பிடித்து டெல்லிக்குப் பறந்துவிட்டார்.
இதற்கிடையில், ராமதாஸைப் பார்க்க தைலாபுரம் தோட்டத்துக்கு ஜவ்டேகர் வருகிறார் என்ற தகவல் பரவியது. விஷயம் ராமதாஸ்க்கும் போனது. ‘கேட்டை இழுத்து மூடுங்க.. யாரு வந்தாலும் நான் பார்க்க விரும்பல!’ என்று சொல்லிவிட்டாராம் ராமதாஸ். முறைப்படி அப்பாயின்மெண்ட் வாங்காம இப்படியா தலைவர்களைச் சந்திக்க வருவது?’ என்று வருத்தப்படுகிறார்கள் தமிழக பிஜேபி-யினர்.’’
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்ட ட்விட்டர், ‘’ராகுல்காந்தியை இரண்டு மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசர் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அதிமுக-வுடன் கூட்டணி வைக்கலாம் என்று ராகுல் சொல்லியிருக்கிறார். வாசன் அந்தக் கூட்டணிக்குப் போக முயற்சி செய்வதாக திருநாவுக்கரசர் சொல்ல..’வாசன் பார்ட் ஆஃப் த காங்கிரஸ் தானே… அவர் போனால் நாம போகக் கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். திருநாவுக்கரசரும் விசயத்தை கார்டனுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், பதில்தான் வரவில்லை. அதிமுக கூட்டணிக்கு முயற்சி செய்துவரும் வாசனுக்கும் இன்னும் கார்டனில் இருந்து நல்ல தகவல் எதுவும் இல்லை!’’ என்று ட்விட் அடித்தது.

‘’காங்கிரஸ் இருப்பதால் திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என்று வாசன் இன்று சொல்லியிருக்கிறாரே கவனித்தீரா?’’ என்று கேட்டது வாட்ஸ் அப். அதற்கு பதிலைத் தயாராக வைத்திருந்தது ஃபேஸ்புக்.
’’தமாகா-வை திமுக கூட்டணியில் சேர்க்க அதிக முயற்சி எடுப்பவர் பீட்டர் அல்போன்ஸ்தான். கட்சிக்கு தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் கிடைக்க 8 சதவிகிதம் வாக்குகள் வாங்கியிருக்க வேண்டும் அல்லது 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். அதற்கு, சரியான சாய்ஸ் திமுக-தான் என்பது பீட்டரின் எண்ணம். இதை வாசனிடமும் அவர் சொல்லியிருக்கிறார். ’திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்துவிட்டதால் அந்தப் பேச்சுக்கே இடமில்லை’ என்று வாசன் சொல்லிவிட்டாராம். அதைத்தான் இன்று பிரஸ் மீட்டிலும் சொல்லியிருக்கிறார்” என்றபடி சைன் அவுட் ஆனது.
ஆஃப் லைனுக்குப் போயிருந்த வாட்ஸ் அப் திடீரென ஆன்லைனுக்கு வந்து, ‘விஜயகாந்த்தும் கலாநிதி மாறனும் சந்தித்து திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டதாக நீர் எழுதி வருகிறீர்கள். ஆனால், கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று திருக்கோவிலூரில் விஜயகாந்த் பேசியிருக்கிறாரே… அதுக்கு பதில் இருக்கா?’’ நம்மிடம் ஒரு கேள்வி கேட்டது. ’’இல்லாமலா… நாளை காலை 7 மணிக்கு அதுதான் ஸ்பெஷல் ஸ்டோரி!!’’ என்று ரிப்ளை போட்டோம்.,”
