ஆணாகப் பிறந்து தங்களைப் பெண்ணாக உணர்கிறவர்களை நாம் திருநங்கைகள் என்கிறோம். நீண்ட காலமாக அங்கீகாரமற்று பொதுவெளியில் அவமானங்களைச் சந்தித்து வந்த திருநங்கைகளுக்கு இன்று ஓரளவு அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை உயர்கல்வி பெறும் அளவுக்கு சில திருநங்கைகள் உயர்ந்துள்ளனர். காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் இந்திய அளவில் முதன்முதலாக ஒரு திருநங்கை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
அக்கை பத்மஷாலி, பெங்களூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். ஆணாகப் பிறந்த இவர் பள்ளிப்பருவத்தில் தன்னை திருநங்கையாக உணர்ந்தார். திருநங்கையாக இவரின் பழக்க வழக்கங்கள் மாறியதால் குடும்பத்தினர் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஆதரவற்று தெருவில் இருந்த இவர், பாலியல் தொழிலாளியாக மாறி தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
பாலியல் தொழிலாளியாக தன் வாழ்வை துயரத்துடன் கழித்துக் கொண்டிருந்த பத்மஷாலியை மீட்டு தங்கள் அமைப்பில் இணைத்தனர், ‘சங்கமா’ என்ற தன்னார்வ அமைப்பினர். அதில் பத்மஷாலி, இவரைப் போன்று பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பாலியல் தொழிலாளிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதிலிருந்து கிடைத்த அனுபவத்தின் மூலம் ‘ஒந்ததே’ என்ற அமைப்பைத் தொடங்கினார். தன்னைப் போன்ற திருநங்கைகளின் உரிமைக்காகப் போராடும் அமைப்பாக அதை மாற்றினார். அந்தப் போராட்டமே அவருக்கு இப்போது கவுரத்தையும் மரியாதையையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
பத்மஷாலியை கவுரவிக்கும்விதமாக இந்தியாவில் அமைதி மற்றும் கல்விக்கான மெய்நிகர் பல்கலைக்கழகம் கடந்த 31ம் தேதி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இதுவே முதன்முறை.
இதுகுறித்து அக்கை பத்மஷாலி, “இந்த உயரிய விருது எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விருதை அளித்த அமைதி மற்றும் கல்விக்கான மெய்நிகர் பல்கலைக்கழகத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். டாக்டர் பட்டம் பெற்றது மட்டுமல்லாமல் பத்மஷாலிதான் முதன்முறையாக ஓட்டுநர் உரிமமும் பெற்றவர். கர்நாடக அரசின் உயரிய விருதான ‘ராஜ்யோத்சவா’ விருதையும் வென்றுள்ள பத்மஷாலி, திருநங்கைகள் என்றால் பாலியல் தொழில் செய்கிறவர்கள் என்ற பொது எண்ணத்தை மாற்றி, அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
