இந்தியாவின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி – ஓர் பார்வை

Published On:

| By Balaji

ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் சேவையின் மொத்த பண மதிப்பே, உள்நாட்டு மொத்த உற்பத்தி என அழைக்கப்படுகிறது. ஜிடிபி எனப்படும் இது, காலாண்டுக்கோ அல்லது ஓர் ஆண்டுக்கோ கணக்கிடப்படும். உலகம் முழுவதும் ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்ள ஜிடிபியே பயன்படுகிறது. 1944-ம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் முறையாக ஜிடிபியை ஏற்றுக்கொண்டன. இதன் அடிப்படையில்தான் அதிக வருமானமுள்ள நாடுகள், குறைந்த வருமானமுள்ள நாடுகள், நடுத்தர வருமானமுள்ள நாடுகள் என உலக நாடுகள் மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகின்றன. இதில், ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் நிகர மதிப்பும் கூட்டப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவியபோதும், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி விகிதத்தில் இருந்தது. இதன் காரணமாகவே இந்தியாவுக்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘இந்தியா ஒரு வளரும் நாடு அல்ல, ஒரு வளர்ந்த நாடு. இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் உதவும் வகையில் உள்ளது’ எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கடந்த 2015-16ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.113.50 லட்சம் கோடியாக உள்நாட்டு உற்பத்தி அளவு பதிவாகியுள்ளது. மத்திய புள்ளியில் அலுவலகம் கடந்த பிப்ரவரி மாதம் 2015-16ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 7.6 சதவிகிதம் வரையில் உயரும் எனக் கணித்திருந்தது. கணிக்கப்பட்டது போலவே தற்போது ஜிடிபி 7.6 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2015-16ம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.5 சதவிகிதமும், இரண்டாம் காலாண்டில் 7.6 சதவிகிதமும், மூன்றாம் காலாண்டில் 7.2 சதவிகிதமும் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியிருந்தது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. நமது நாட்டுக்கு அடுத்தபடியாக 6.9 சதவிகிதத்துடன் பிலிப்பைன்ஸ் நாடு இரண்டாம் இடத்திலும் , சீனா 6.7 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு, மின்சார உற்பத்தி வளர்ச்சி போன்றவை இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம். அடுத்த 2016-17ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் 8 ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில், நான்காம் காலாண்டில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜிடிபியானது மதிப்புக்கூட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியானது அளவைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. ஜிடிபிக்கும் தொழில்துறை உற்பத்தி விகிதத்துக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது. தொழில்துறை உற்பத்தி விகிதம் குறைந்ததற்குக் காரணம் ஸ்டீல் துறையில் நிலவும் மந்த நிலைதான். கடந்த ஆண்டில் 14 சதவிகிதம் அளவுக்கு இத்துறையில் உற்பத்தி குறைந்துள்ளது. சீனாவில் தொழில்துறை வளர்ச்சி 6 சதவிகிதமாகவும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இது 7.8 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

தயாரிப்புத் துறை உற்பத்தி இந்த காலாண்டில் 1.2 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் 2.7 சதவிகிதமாக பதிவாகியிருந்தது. சுரங்கத்துறை உற்பத்தியும் 1.2 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. கட்டுமானத்துறை 3.9 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.

அதிக அளவாக, பொறியியல் பொருள்கள் துறை உற்பத்தி சென்ற மார்ச்சில் 15.4 சதவிகிதம் பின்னடைவைக் கண்டது. கடந்த ஆண்டு மார்ச்சில் இத்துறையின் உற்பத்தி 9.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது. சென்ற நிதி ஆண்டில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.4 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. 2014-15 நிதி ஆண்டில் இது 2.8 சதவிகிதமாக இருந்தது என்று அந்தப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சாராத துறையின் உற்பத்தி விகிதம் கடந்த காலாண்டில் 8.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 8.9 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்க நினைக்கும் பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்த நினைக்கும் நேரத்தில், வேளாண் சாராத துறையின் வளர்ச்சி குறைந்ததுள்ளது கவலைக்குரியது.

பொருளாதார வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி தகவல்களை உலகம் முழுவதும் உற்றுநோக்கிக் காத்திருந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ‘முரண்பாடுகள்’ என அதிக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகித உயர்வின் காரணம், எந்தத் துறையில் வளர்ச்சி அதிகம் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை என பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

– கருப்பு,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share