கிருஷ்ண பாகவதர்
வருடந்தோறும் பெய்யும் வான்மழை பொய்த்தாலும் சென்னையில் பெய்கின்ற இசைத் தேன்மழை சிறிதும் குறைவின்றி 90 வருடங்களாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது. ‘கிளாசிகல் மியூசிக்’ என்னும் பாரம்பர்ய இசைக்காக நடத்தப்படும் மிகப் பெரிய விழா என்று கூறத்தக்க சென்னை இசை விழா பல தனிச் சிறப்புகளுக்கு உரியது.
**சென்னை இசை விழா வரலாறு**
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இசை விழாக்கள் ஏதேனும் ஓர் இசை மேதையின் நினைவாகவே தொடங்கப்பட்டு அவர் பெருமைகளை நினைவுகூரும் விதமாகவே நடத்தப்படுகின்றன. ஜெர்மனியின் ‘பீர்’ (Beer) விழா (பீத்தோவன் நினைவாக), இந்தியாவின் மிகப் பெரிய இசை விழாக்களான ‘தான்சேன் விழா’, ‘ஹரிவல்லப விழா’, ‘கந்தர்வா பீம்சென் விழா’, ‘ஹரிதாஸ் விழா’, ‘தியாகராஜ ஆராதனை’ போன்ற பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
சென்னை இசை விழா அப்படி அல்ல. ஒரு தேசிய இயக்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக உருவான விழா இது. தீவிரமான தேசியத் தலைவர்களால் தொடங்கப்பட்ட உலகின் ஒரே பராம்பர்ய இசை விழா.

1927இல் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அகில இந்திய இசை மாநாடு ஒன்று சென்னையில் நடத்தப்பட்டது. இந்தியப் பாரம்பர்ய இசை மற்றும் பிற கலாசார வடிவங்களைக் காக்கும் நோக்கத்துடன் அக்கூட்டம் கூட்டப்பட்டது. தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு, சென்னை மியூசிக் அகாடமியில் இதன் தொடர்பாக நடந்த சில கர்னாடக இசைக் கச்சேரிகள்தாம் பின்னர் ‘மார்கழி உற்சவம்’ என்ற பெயரில் நகரெங்கும் நடைபெறத் தொடங்கிய இசை விழாவின் அடிப்படையாக விளங்கின.
அந்தக் காலக்கட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக விளங்கிய வழக்கறிஞர்கள் கர்னாடக இசையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களின் ஈடுபாடும் ஆதரவும் இந்த முயற்சியின் வெற்றியில் பெரும் பங்காற்றின.
சென்னை இசைவிழா தொடர்ந்து மார்கழி மாதத்தில் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. ‘பார்த்தசாரதி சபா’ போன்ற சில சபாக்கள் மயூசிக் அகாடமிக்கு முன்பே (1900இல்) தொடங்கப்பட்டிருந்தாலும் அவற்றின் நிகழ்ச்சிகளுக்குரிய கால அட்டவணை வரையறுக்கப்படாமல் இருந்தது. மியூசிக் அகாடமியின் ஆதரவாளர்களாக இருந்த வழக்கறிஞர்களுக்கு விடுமுறையாக அமைந்த டிசம்பர் மாதக் கடைசி வாரம் இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வசதியாக இருந்ததுதான் சென்னை இசை விழா டிசம்பர் மாத பிற்பகுதியில் நடைபெறுவதன் முக்கியக் காரணமாக அமைந்தது.
கடுமையான வெயிலும் கடுப்பேற்றும் மழையும் இல்லாத, மிதமான பருவ நிலை நிலவும் அச்சமயத்தில் மனதுக்கு இதமான இசையைக் கேட்பது சுகமான அனுபவமாக விளங்கியது.
இசை விழாவின் ஓர் அம்சமாக மாறத் தொடங்கிய கேன்டீன்களும் டிசம்பரில் விழா நடைபெறும் வழக்கத்துக்குத் துணை நின்றன. சமையல் கலைஞர்களுக்கு, மார்கழி மாதம் திருமண கான்டிராக்ட்கள் கிடைக்காத சமயம் என்பதால் போட்டி போட்டுக்கொண்டு இசை விழா சமயத்தில் சபாக்களில் தங்கள் திறமையை அவர்கள் காட்டினார்கள்.

**சென்னையின் அடையாளங்களில் ஒன்று**
இப்படித் தொடங்கிய இசை விழா, இன்று சென்னையின் ஒரு முக்கியக் கலாசார அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சென்னையைப் படைப்பாக்க நரங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனம் அண்மையில் அறிவித்திருப்பதற்கும் சென்னை இசை விழா ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
சுமார் 100 சபாக்களில் 500க்கும் அதிகமான கர்னாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றுக் கச்சேரிகளை வழங்குகிறார்கள். இவற்றை நேரில் கேட்டு ரசிப்பதற்காக, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பல வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் சென்னை வருகிறார்கள்.
உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ள இசை நிகழ்வாக சென்னை இசை விழா விளங்குகிறது. ஆனால், இதன் மறுபக்கமாக இருக்கும் ஒரு கசப்பான உண்மையையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
**இசை விழாவை ஒதுக்கும் மத்திய அரசு**
கர்னாடக இசையின் ‘மெக்கா’வாகச் சென்னை திகழ்வது பற்றியும் அங்கு நடைபெறும் இசை விழா பற்றியும் இந்தியாவின் பெரும்பான்மையான பாரம்பர்ய இசை ரசிகர்களுக்குக்கூட அதிகம் தெரியாது. தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களைத் தாண்டி இந்த அற்புத நிகழ்வு பலருக்கும் அறிமுகம் இல்லாமல் ஆகிவிட்டதன் அவல நிலைக்கு இந்திய அரசும் ஒரு காரணம். இந்தியாவின் முக்கியமான பாரம்பர்ய இசை விழா என்று விளம்பரப்படுத்தப்படும் அதிகாரபூர்வப் பட்டியல்களில் சென்னை விழாவுக்கு உரிய இடம் இல்லை.
இந்தியாவின் மிகப் பெரிய பாரம்பர்ய இசை விழாக்களாக அறியப்படும் தான்சேன் இசை விழா, ஹரி வல்லப விழா, கந்தர்வ விழா ஆகிய எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில தினங்களுக்கு மட்டுமே நடைபெறும் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள்.
இந்துஸ்தானி இசையின் ஒரு குறிப்பிட்ட (கரானா என்ற) இசை வடிவத்தை மட்டும் முன்நிறுத்தி நடைபெறும் இந்த விழாக்கள் போல் அல்ல, சென்னை இசை விழா. ஏறக்குறைய, ஒரே கால இடைவெளியில் சென்னையின் பல இடங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது (இலவசமாகவும் கட்டணத்துடனும்) நடைபெறும் நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நிகழ்வுகளில் வாய்ப்பாட்டு , வாத்தியம், ஹரிகதை, பரத நாட்டியம், கதக், குச்சிபுடி மற்றும் மோகினி நடனங்கள் ஆகிய கலை வடிவங்கள் மட்டுமின்றி, ஹிந்துஸ்தானி இசைக்கும் இடம் உண்டு. நாடகங்கள், இசை ஆராய்ச்சி விவாதங்கள் ஆகியவையும் இந்த இசை விழாவில் நடக்கும்.

**மத்தியானக் கச்சேரிகளும் மாலை நேரக் கச்சேரிகளும்**
கர்னாடக இசைப் பாரம்பர்யத்தில் ஒரு சமயம் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்த குருகுல வாசம் கால மாற்றங்களால் காலாவதியான கரன்சி நோட்டாக ஆகிவிட்டது. ஆனால், அதன் அடிப்படையாக இருந்த குரு சிஷ்ய உறவு அழியவில்லை.
மூத்த கலைஞர்கள், சிஷ்யர்களைத் தங்கள் வீடுகளில் தங்க வைத்துக்கொண்டு பயிற்சி கொடுக்க இயலாமல் போனபிறகு, தாங்கள் பாடும் அனைத்துக் கச்சேரிகளிலும் தங்கள் சிஷ்யர்களை அழைத்துச் செல்வதுடன், நடு நடுவில் அவர்கள் பாடவும் வாய்ப்பளித்தார்கள்.
ஆனால், இதுவும் நெடு நாள்கள் நீடிக்கவில்லை. தங்களுக்குப் பிடித்த பாடகர்களின் கச்சேரியின் மத்தியில் ரசிகர்கள் இந்த ‘டியூஷன் வகுப்பை’ விரும்பவில்லை. எனவே, இந்த சிஷ்யர்களுக்காக இசை விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைதான் மத்தியானக் கச்சேரி. இது இசை விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகத் தற்போது விளங்குகிறது.
தொடக்கத்தில் விழாவில் வாய்ப்பு கிடைக்காதவர்களின் புகலிடமாக இருந்த மத்தியானக் கச்சேரிகள் இப்போது வளரும் கலைஞர்கள் அறிமுகமாகும் களமாகத் திகழ்கிறது. அனுமதி இலவசம் என்பதால் வளரும் கலைஞர்களுக்கு ரசிகர்களும் கிடைத்துவிடுகிறார்கள்.
சென்ற சீசனில் 12 மணிக்குப் பாடிய இந்தப் பையன் / பெண் இந்த சீசனில் 4 மணிக்கு வந்துவிட்டார் பாருங்கள்; இன்னும் இரண்டு வருடத்தில் 7 மணி தான் என்று தங்கள் அபிமான இளம் கலைஞரின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டப் பயன்படும் அளவீடாகவும் இது இருக்கிறது.

**இசை விழா கேன்டீன்கள்**
சிறப்புமிக்க சென்னை இசை விழாவுடன் பின்னிப்பிணைந்த ஒரு அம்சமாகத் திகழ்பவை அச்சமயத்தில் அங்கு நடத்தப்படும் கேன்டீன்கள். நகரின் பிரபலமான சமையல் கலைஞர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கைவண்ணத்தைக் காட்டும் இந்த உணவுத் திருவிழா அமோக வரவேற்பையும் அதிக எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்துகின்றன.
**இசை வெள்ளம் நாளை காலையும் தொடரும்…**,”









