வெறும் 258 ரூபாய் தானா?… இந்தியா குறித்த உலக வங்கியின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published On:

| By Minnambalam Desk

world bank deliver shocking report on india poverty

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா தனது வறுமை ஒழிப்பு திட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. world bank deliver shocking report on india poverty

அதில் கடந்த 2011–12 ஆம் ஆண்டில் 27.1% ஆக இருந்த இந்தியாவின் வறுமைக்கோடு, 2022–23 ஆம் ஆண்டில் 5.3% ஆக குறைந்துள்ளதாகவும் இதன் மூலம், சுமார் 26.9 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வறுமைக்கோட்டின் வரம்பாக நாள் ஒன்றுக்கு 185 ரூபாயில் இருந்து 258 ரூபாயாக (2021 பணவீக்க பரிமாற்ற அளவில்) உலக வங்கி உயர்த்திய போதிலும், இந்தியா அதில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

அதன்படி கடந்த 2011-12-இல் இந்தியாவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 16.2% ஆக இருந்தது. அது 2022-23-இல் 2.3% ஆக குறைந்தது. இதன் மூலம் 17.1 கோடி மக்கள் வறுமைக்கோட்டை தாண்டியுள்ளனர்.

ADVERTISEMENT

ஊரக பகுதிகளில் கடுமையாக காணப்பட்ட இந்த வறுமை 18.4% இருந்து 2.8% ஆக குறைந்தது. அதுவே நகரப் பகுதிகளில் 10.7% இருந்து 1.1% ஆகக் குறைந்தது.

கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையிலான வறுமை வித்தியாசம் 7.7% இலிருந்து 1.7% ஆக குறைந்துள்ளது. வருடத்திற்கு சராசரியாக 16% வறுமை குறைவு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவின் தற்போது குறைந்த-நடுத்தர வருமான நாடுகளின் (Lower-Middle Income Countries) பட்டியலில் சேர்ந்துள்ளது. அந்த நிலைக்கு ஏற்றவாறு 314 ரூபாய் என்ற வறுமைக்கோட்டை வைத்து பார்க்கும்போது, இந்தியாவின் வறுமை 61.8% இருந்து 28.1% ஆக குறைந்துள்ளது.

இதன்மூலம் 378 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர். கிராமப்புற வறுமை 69% இருந்து 32.5% ஆகவும், நகர வறுமை 43.5% இருந்து 17.2% ஆகவும் குறைந்துள்ளது.

கிராமப்புற-நகர வறுமை வித்தியாசம் 25% இருந்து 15% ஆக குறைந்துள்ளது (வருடத்திற்கு 7% குறைவு).

இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகையுள்ள ஐந்து மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்காளம், மற்றும் மத்தியப்பிரதேசம் கடந்த
2011-12-இல் இந்தியாவின் கடுமையான வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களில் 65% சதவீதத்தைக் கொண்டிருந்தன.

இவை 2022-23 வரையிலான காலக்கட்டத்தில் வறுமை குறைவில் 2/3 பங்கு வகித்துள்ளன.

இருப்பினும், இவை தற்போது (2022-23) நாட்டின் 54% கடுமையான வறுமை உள்ள மக்களையும், 51% பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வறுமை (Multidimensional Poverty – MPI, 2019-21) உள்ள மக்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வறுமை 2005-06-இல் 53.8% இருந்தது, அது 2019-21-இல் 16.4% ஆக குறைந்துள்ளது.

உலக வங்கியின் மதிப்பீட்டுப்படி, 2022-23-இல் இந்த MPI வறுமை 15.5% ஆக உள்ளது.

ஆனால் இந்தியாவில் பொருளாதார சமநிலை கடந்த பத்தாண்டுகளில் வெறும் 3% குறைவான அளவிற்கு தான் குறைந்துள்ளது.

உலக வங்கியின் அறிக்கையில் உள்ள ஜினி குறியீடு (Gini Index) அடிப்படையில் 2011-12-இல் 28.8 இருந்து 2022-23-இல் 25.5 ஆக மேம்பட்டது.

ஆனால், உலக வருமான தரவுத்தளம் (World Inequality Database) சொல்லுவதுபோல், வருமான வேறுபாடு அதிகரித்துள்ளது. அது 2004-ல் குறியீட்டின் அளவு 52 இருந்தது, 2023-இல் 62 ஆக உயர்ந்துள்ளது.

ஊதிய வேறுபாடு இன்னும் அதிகமாகவே உள்ளது. 2023-24-ல், 10% உயர் நடுத்தர மக்களின் வருமானமும், 10% ஏழை மக்களுக்கும் இடையில் 13 மடங்கு அதிகம் ஊதிய வேறுபாடுகள் உள்ளது.

வேலைவாய்ப்பை பொறுத்தவரை 2021-22 முதல் வேலை தேடும் மக்களைவிட வேலைக்கு செல்பவர்களின் வளர்ச்சி வேகமாக உள்ளது. குறிப்பாக மகளிருக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

நகர வேலையின்மை 2024-25 முதல் காலாண்டில் 6.6% ஆகக் குறைந்துள்ளது. இது 2017-18 முதல் மிகக் குறைந்த அளவாகும்.

2018-19க்கு பிறகு முதன்முறையாக, ஆண்கள் ஊரிலிருந்து நகரத்திற்கு வேலைக்காக நகர்கின்றனர். கிராமப்புறங்களில் பெண்கள் வேளாண் துறையில் மற்றும் சுயத்தொழிலில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.

எனினும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 13.3% உள்ளது. குறிப்பாக உயர் கல்வியில் பட்டம் பெற்ற இளைஞர்களில் 29% வேலையில்லாமல் உள்ளனர்.

நாடு முழுவதும் 31 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அதேவேளையில் வேலைக்கு செல்கின்ற ஆண்கள் பெண்களை விட 23.4 கோடி அதிகமாக உள்ளனர். இது பாலின வேறுபாட்டை காட்டுகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share