திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்பதா? நிராகரிப்பதா? என்ற முடிவை சிபிஎம் இன்று அறிவிக்க இருக்கிறது.
திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக பேச்சுவார்த்தை குழு தெரிவித்தது. ஆனால் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவோ, கூடுதலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 2021 தேர்தலில் போட்டியிட்டதைப் போல 6 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் சிபிஎம் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடி சுமார் 13 மணிநேரம் ஆலோசித்தது. இதனையடுத்து சிபிஎம் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதனடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சிபிஎம் குழு, ஸ்டாலினை சந்தித்து பேசியது.
இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். 5 தொகுதிகளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளை பரிசீலனை செய்வது தொடர்பாக மாநில குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவித்திருந்தார்.
சிபிஎம் கட்சியின் மாநில குழு இன்று மார்ச் 23-ந் தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் 5 தொகுதிகளை ஏற்பதா? நிராகரிப்பதா? என்ற முடிவை சிபிஎம் அறிவிக்க இருக்கிறது.
முன்னதாக, 6 தொகுதிகளை திமுக தராவிட்டால் சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது; பல தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என்கிற முடிவை எடுக்கலாம் என சிபிஎம் ஆலோசித்திருந்தது.
