இசையமைப்பாளர் இளையராஜா ‘இது எங்கள் நீதி’ படத்தின் பாடலை விஜய் படத்துடன் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன.

அதே சமயம் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு தமிழக வெற்றி கழகம் 98-120 தொகுதிகள் வெல்லும் என்று கூறுகிறது.
தேர்தல் முடிவுக்கு இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் இசைஞானி இளையராஜா, நேற்று தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் “இது எங்கள் நீதி” படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது இளையராஜா தினமும் தனது இசையில் வெளியான இரண்டு பாடல்களை ஆடியோவாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இது எங்கள் நீதி படத்திலிருந்து, ‘சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ என்ற பாடலை விஜய் படத்துடன் வெளியிட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் பாடல் வரிகள் மட்டுமின்றி படத்தின் பெயருக்கு அப்பாற்பட்டு அந்தப் பாடலின் ஹோம் இமேஜின் பின்புறத்தில், பெரிய அளவிலான மாளிகை முன்பு கட்சி கொடியை உயர்த்தி தொண்டர்கள் உற்சாகத்தில் இருப்பது போலவும் வெற்றியின் அடையாளமாக கையை உயர்த்தி காட்டுவது போலவும் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.
அரசியலை எதிரொளிக்கும் வகையிலான இந்த காட்சிகளும் பாடல் வரிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இது எங்கள் நீதி படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
