அ. குமரேசன்
நேரடியாக அறிவிக்காமலே பள்ளி வணிகப் பாதுகாப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஒன்றிய–மாநில ஆட்சியாளர்களும் நிறுவனத்தார்களும். நேர்மையாக அறிவித்துப் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் கிராம–நகர ஆசிரியர்களும் அக்கறையாளர்களும்.
முன்னேறி நடக்க விடாமல் கால்களைப் பின்னுக்கு இழுக்கிற சாதி மத பேதங்கள், பாலினப் பாகுபாடுகள், வாழ்நிலை ஏற்றத்தாழ்வுகள், அறிவுரிமை வேற்றுமைகள் இன்னபிற தளைகளிலிருந்து விடுதலை பெற்ற நாடுதான் அனைவருக்குமான அன்பும் மதிப்பும் நிறைந்த வீடு. அந்த வீட்டைக் கட்டக்கூடிய வல்லமை வாய்ந்தது கல்வி.

பழைய அத்தியாயம்
பழம்பெருமைகள் பேசுகிற நாட்டின் வரலாற்றில், தற்போதைய பள்ளிக் கல்வி முறை வருவதற்கு முன்பே திண்ணைக் கல்வி, குருகுலக் கல்வி என்றெல்லாம் இருந்த அத்தியாயம் உண்டுதான். ஆனால், அந்தத் திண்ணைகளில் எல்லோரும் ஏறி அமர்ந்துவிட முடியாது, குருவின் குடிலில் எல்லாச் சமூகத்தினரும் நுழைந்துவிட முடியாது என்ற பதிவுகளை அந்த அத்தியாயத்தில் பார்க்க முடியாது. அதை அறிவதற்குக் கூட உண்மை வரலாறுகளைச் சொல்லும் பொதுக்கல்வி தேவை. அது அனைவருக்குமான பள்ளி வளாகத்தில்தான் கிடைக்கும்.
ஒரு பக்கம் நாட்டை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சி, இன்னொரு பக்கம் கல்வி உரிமையை விடுவிக்கவும் செய்தது. அன்றைய மதராஸ் மாகாண ஆளுநர் (1822–26) தாமஸ் மன்றோ ஆய்வறிக்கை, திண்ணைப் பள்ளிகளில் சாதி அடிப்படையில் பல பிரிவினருக்குக் கல்வி மறுக்கப்படுவதை எடுத்துக்காட்டியது. இந்தியாவுக்கான பிரிட்டிஷ் அரசுச் செயலர் (1859–66) சார்லஸ் உட் அதற்கு முன் கிழக்கிந்தியக் குழுமத்தின் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்தபோது 1954இல் அளித்த அறிக்கை, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரையில் ஒரு கட்டமைப்பை உருவாக்க இட்டுச்சென்றது. பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த சட்டங்கள், கிறிஸ்துவ மிஷனரி அமைப்புகளின் பங்களிப்புகள், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே முற்போக்காளர்களின் கருத்துகள், தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் சமூக சீர்திருத்தக் குரல்கள், கம்யூனிஸ்ட்டுகளின் செயல் முனைப்புகள் ஆகியவற்றின் அருங்கனியாகக் கல்வி முறை எல்லாக் குழந்தைகளையும் வளாகங்களுக்குள் அழைத்து வந்தது.
பள்ளியும் வணிகமும்

கிழக்கிந்தியக் குழுமத்தின் ஆட்சி நிர்வாகம் அனைவருக்குமான பள்ளிக் கல்வியைக் கொண்டுவந்தது என்றாலும் அந்தப் பள்ளிகள் மிஷனரிகளாலும், கல்வி வழங்குவதைச் சமூகத் தொண்டாக மேற்கொண்ட அறக்கட்டளை அமைப்புகளாலுமே தொடங்கப்பட்டன. சார்லஸ் உட் அறிக்கைக்குப் பிறகுதான், 1859இல் பிரிட்டிஷ் அரசு கல்வித்துறையை முறைப்படுத்தியது, மாவட்டவாரியாக அரசாங்கப் பள்ளிகளை நிறுவியது. நாட்டின் விடுதலைக்குப் பிறகும் அது தொடர்ந்தது.
1980–90களில் தனியார் நிறுவனங்கள் சந்தை வணிகமாகவே கல்வி நிலையங்களில் முதலீடு செய்வது தொடங்கியது. முதலீடு என்றாலே அதன் இலக்கு லாபம் ஈட்டுவதுதானே?
தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள் அடிப்படையான கல்வி வழங்கும் பொறுப்பைத் தனியார் கைகளில் பிடித்துக் கொடுத்தன. அரசுக் கல்விக்கூடங்களாக இல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து (அதற்குப் பெயர் சுயநிதி) வகுப்பறையில் உட்கார வைக்கும் வணிகக் குழுமங்கள் எங்கும் பளிச்செனத் தெரியும் காட்சிகளாகின.
அந்தப் பக்கம் போகத் தொடங்கிய மக்கள் மறந்தும் இந்தப் பக்கம் திரும்பிவந்துவிடக் கூடாது என்ற வேகத்துடன் அரசாங்கக் கல்வி வளாகங்கள் தரிசாக்கப்பட்டன. நவீன வசதிகள் ஏற்படுத்தப்படாதது, உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாதது, நல்ல கழிப்பறைகள் கூட கட்டப்படாதது, போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது… இவ்வாறாகத் தனியார் வளாகங்கள் வெளிச்சத்தில் மின்னுவதற்காக அரசுக் கல்வி வளாகங்கள் இருட்டில் விடப்பட்டன. அதையும் மீறிப் பல அரசுப் பள்ளிகள் ஒளிர்ந்ததற்குக் காரணம் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புதான்.
திட்டமிட்ட அலட்சியம்

இவ்வாண்டு ஜூலை 27 அன்று நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவரது கேள்விக்கும், ஆகஸ்ட் 3 அன்று வேறு பல உறுப்பினர்களது கேள்விகளுக்கும் ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி பதிலளித்தார். அமைச்சகம், இந்திய மாற்றத்திற்கான தேசிய மன்றம் (நிதி ஆயோக்) ஆகியவற்றின் அறிக்கைகள் அடிப்படையில் அவர் தெரிவித்த அலுவல்சார் தகவல்களின்படி–
- 2014–15 முதல் 2023–24 வரையிலான பத்தாண்டு காலத்தில் நாடு முழுதும் 94,000 பள்ளிகள் மூடப்பட்டன அல்லது வேறு பள்ளிகளுடன் இணைக்கப்பட்டன. அதாவது ஒவ்வொரு நாளும் 25 பள்ளிகள் மூடப்பட்டன.
- அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2.26 கோடி வரை சரிந்துள்ளது.
- மாணவர்கள் சேரும் எண்ணிக்கை குறைவது, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் கொள்கை உள்ளிட்ட காரணங்களால் மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகள் மூடப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் சொல்லாத மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. தமிழ்நாட்டு நிலவரத்தைப் பார்த்துவிட்டு அந்த விவரத்திற்குள் செல்வோம்.
தமிழ்நாட்டு நிலவரம்
- தமிழகத்தில் 24,349 அரசுத் தொடக்கப்பள்ளிகள் இருந்தன. அவற்றில் 246 பள்ளிகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன.
- 3,027 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.
- 6,635 பள்ளிகளில் 20 பேருக்குக் குறைவாக மாணவர்கள் உள்ளனர்.
- 5,167 பள்ளிகள் 30 பேருக்குக் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கின்றன.
ஆக, மொத்தம் 14,829 பள்ளிகளில் – அதாவது 60.39 விழுக்காடு பள்ளிகளில் – 30 மாணவர்களுக்குக் குறைவாக இருக்கிறார்கள். 9,520 பள்ளிகளில் (39.1 விழுக்காடு) மட்டுமே 30 பேருக்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். மாணவர் எண்ணிக்கை குறையாமல் தக்க வைக்கப்பட்டிருப்பதும், அதிகரித்து வருவதும் ஒரு சில அரசுத் தொடக்கப் பள்ளிகளில்தான்.
அமைச்சகம் சொல்லாதது

இப்போது, அமைச்சக அறிக்கைகளில் சொல்லப்படாதது என்னவென்று கவனிக்கலாம். அதுதான் தனியார் பள்ளிகளின் தாக்கம். அமைச்சகம் இதைச் சொல்லாவிட்டாலும், பொதுக் கல்வியின் பங்கு வீழ்த்தப்பட்டு, சுயநிதிப் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வந்திருப்பது அலுவல்சார் ஆவணங்களில் தெளிவாக வெளிப்படுகிறது.
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகள்தான் கல்விப் புகலிடமாக விளங்குகின்றன. ஆயினும் அத்தகைய குடும்பங்களில் கூட, பெற்றோர்கள் கடன் வாங்கியாவது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடத் துடிப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கல்வியாண்டுத் தொடக்கத்திலும், குறிப்பிடத்தக்க பல தனியார் பள்ளிகளின் நுழைவாயில் முன்பாக, விண்ணப்பப் படிவம் வாங்குவதற்கே காத்திருக்கும் பெற்றோர் எண்ணிக்கை இதைக் காட்டுகிறது.
மீண்டெழும் பள்ளிகள்
இத்தகைய சவால்மிக்க சூழலில்தான், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், அரசுப் பள்ளிகளை மீட்பதற்கான பயணத்தைத் தொடங்கியுள்ளது. மாணவர்களைத் தக்க வைத்து, புதியவர்களை ஈர்க்கிற அரசாங்கத் தொடக்கக் கல்விக் கூடங்களை “மீண்டெழும் பள்ளிகள்” என்று அறிவித்து, அவற்றின் அணிவகுப்பில் மற்ற பள்ளிகளையும் பங்கேற்கச் செய்கிற மகத்தான பயணம் இது. பள்ளிப் பாதுகாப்பு என்றாலே அரசுப் பள்ளிப் பாதுகாப்புதான் என்று அறிவித்து இந்தப் பயணம் புறப்பட்டிருக்கிறது.
சென்னையிலிருந்தும், கன்னியாகுமரியிலிருந்தும் இரண்டு அணிகளாகப் புறப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரியில் திருச்சியில் சங்கமிக்கவுள்ள இந்தப் பயணத்தின் ஒரு பக்கமாகக் கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. வழியில் சந்திக்கிற மக்களிடம் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதன் தேவையை எடுத்துச் சொல்லி, அதன் நியாயத்தை அவர்கள் ஏற்பதற்கு அடையாளமாகக் கையெழுத்துப் பெறப்படுகிறது.
கைகோர்க்கும் கலைஞர்கள்
இன்னொரு பக்கமாக, மக்களைக் கவனிக்க வைப்பதற்காக, கையெழுத்துகள் திரட்டுவோருடன் கலைக் குழுக்கள் இணைந்துள்ளன. தெருமுனைப் பாடல்களாலும் வீதி நாடகங்களாலும் நோக்கம் எடுத்துரைக்கப்படுகிறது.
இந்த உண்மையான புனிதப் பயணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களோடு கல்லூரிப் பேராசிரியர்கள், கல்விப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற – பணியில் இருக்கிற வங்கி, காப்பீடு, அரசுத்துறை, பொதுத்துறை உள்பட பல்வேறு கட்டமைப்புகளின் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் உழைப்பவர்கள், மாணவர்–இளைஞர்– மாதர் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தொழிலாளர் சங்கங்களையும் விவசாயிகள்–விவசாயத் தொழிலாளர் அமைப்புகளையும் சார்ந்தவர்கள், மருத்துவர்கள், சிறிய–நடுத்தரத் தொழில்களை நடத்துகிறவர்கள், ஊடகவியலாளர்கள் என்று இணைகிறார்கள்.
வெளிச்சம் தரும் விளக்கங்கள்
சந்திக்கும் மக்களிடம் அரசுப் பள்ளிகள் ஏன் தேவை என்று எடுத்துரைக்கிறார்கள். ஓர் அரசுப் பள்ளி பல்வேறு சமூக சூழலில் இருந்து வரும் குழந்தைகள் பாகுபாடின்றி ஒன்றிணைந்தும், பல்வேறு சமூகப் பின்னணியை புரிந்து கொண்டும் கல்வி பயிலும் இடம்; நட்புறவு, பரிவு, சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் இடம்; மனிதநேயத்தையும், வெற்றி தோல்விகளை சமமாக உணர்தலையும், வாழ்வியல் திறன் மேம்பாட்டையும், பண்பாட்டு விழுமியங்களையும் வளர்த்தெடுக்கும் இடம்.
அரசுப் பள்ளிகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? அவை நமது வரிப்பணத்தால் இயங்குபவை. கட்டணம் இல்லாமல் தரமான கல்வி பெறுவது சட்டப்படி எல்லாக் குழந்தைகளின் அடிப்படை உரிமை. எந்தக் குழந்தையும் விடுபடாமல் மனித வளங்களாக மாற்றப்பட வேண்டும். இவை நடைபெறுவதற்கு அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இயக்கத்தினர் தனியார் பள்ளிகள் பற்றிய விமர்சனங்களை முன் வைக்காமல் அரசுப் பள்ளிகள் பற்றிய கரிசனத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் நம்பிக்கை கொள்ள, தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் அரசாங்கமே மழலையர் வகுப்புகளைத் தொடங்கி முன்பருவக் கல்வியை வழங்குதல்; ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசவும் எழுதவும் தொடக்க வகுப்புகளிலிருந்தே சிறப்புப் பயிற்சிகள் அளித்தல்; பாடங்களைத் தாய்மொழியில் கற்பித்தல் –என்ற திட்டங்களை அரசிடம் முன்வைப்பதற்கும் இந்த இயக்கம் புறப்பட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகள் நலிவடையாமல் காக்க பாடத்திற்கு ஓர் ஆசிரியர், வகுப்பிற்கு ஓர் ஆசிரியர், 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என நியமித்தல்; பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; பள்ளிச் சேர்க்கை எல்லையை வரையறுத்தல்; பள்ளி மேலாண்மைக் குழு மூலம் சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்தல் என்ற அணுகுமுறைகளும் முன்மொழியப்படுகின்றன.
வெற்றிக் காரணிகள்

“மீண்டெழும் அரசுப் பள்ளிகள்” என்ற பதக்கத்திற்கு உரிய வெற்றித் தகுதியைப் பெற்றிருப்பதற்கு மூன்று முக்கியக் காரணங்களையும் விளக்குகிறார்கள். அந்தப் பள்ளிகளில் தரமான கல்வியை கொடுத்து வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு; அந்தப் பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளிட்ட உள்ளூர் சமூகத்தின் அக்கறையும் உதவியும்; பள்ளிக்கு நல்ல கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தப் புரவலர்களின் தாராள உதவி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இத்தகைய வழிமுறைகளில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் மீண்டெழும் பள்ளிகளாக மாற்றுவதும், அவ்வாறு மாற்றுவதற்கான ஆக்கநிறைச் செயல்களை மேற்கொள்ள அரசாங்கத்தை வலியுறுத்துவதும் அனைவரின் கடமை என்று கூறுகிறார்கள். அந்தக் கடமையை நிறைவேற்ற அவரவர் வாய்ப்பைப் பொறுத்து நேரடியாகவோ, நிதி உதவி உள்ளிட்ட வேறு வழிகளிலோ பங்களிக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். மக்களை மனமுவந்து அந்த மனநிலைக்கு வரவழைக்கும் வேலையைக் கலைக்குழுவினர் செய்கிறார்கள்.
பள்ளிகளின் இரண்டாம் பருவம் தொடங்கிவிட்ட மாதத்தில் புறப்பட்டுள்ள, நிறைவாக அரசிடம் அனைத்துத் தரவுகளையும் ஒப்படைக்கவுள்ள கையெழுத்து–கலைப் பயண இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் புதனன்று (அக்.28) தொடங்கிவைத்தார்கள். மூத்த வழக்குரைஞர் சுதா ராமலிங்கம், சென்னை கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரளயன், மாற்று ஊடக மையத்தின் பேராசிரியர் காளீஸ்வரன், கரப்பான் ஜனதா கட்சி ஒருங்கிணைப்பாளர் செல்வ கார்த்திக், எழுத்தாளர்கள் மயிலை பாலு, எஸ்.வி. வேணுகோபாலன் உள்ளிட்டோரும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். தொடக்கவிழாவை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், குறிச்சி இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் பள்ளி மேனாள் தாளாளர் தனபால், உளவியலாளர் நளினி, ஒருங்கிணைத்தனர்.
தெருவில் கையெழுத்துப் பெறுவதைக் கவனித்த ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து விவரங்கள் கேட்டு, தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கையெழுத்திட்டுச் சென்றார். அடுத்தடுத்த நாட்களில் இப்படிப்பட்ட உணர்ச்சிகர நிகழ்வுகள் தொடர்ந்து தெருவேறும் என்று எதிர்பார்க்கலாம். உங்கள் ஊருக்கும் இவர்கள் வருவார்கள். உங்கள் குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்த்திருந்தாலும் இந்தப் பயணத்தின் இலக்கிற்கு உங்கள் ஒருமைப்பாட்டையும் பதிவு செய்வீர்கள்தானே?
கட்டுரையாளர் குறிப்பு
அ.குமரேசன் – இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஏழு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும்மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com
