பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெளியேறிய வெள்ளத்தால் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சங்கோஷ் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிபுர்துவார் மாவட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பூடானின் காசா மாவட்டத்தில் வக்கிலா மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஷின்டாபு (Shintaphu) பனிப்பாறை ஏரி அக்டோபர் 29-ந் தேதி மாலை உடைந்தது. இதனால் ஏரியில் தேங்கியிருந்த பெருமளவு தண்ணீர் மலைப்பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.
பூடானின் புனாட்சாங்சு ஆறு இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு சங்கோஷ் ஆறு என அழைக்கப்படுகிறது. இதனால் சங்கோஷ் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஷா, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறுகையில், ”மாவட்ட மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. தற்போதைய நிலைமை கட்டுக்குள் உள்ளது. பூடான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். காவல்துறை, மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஏற்கெனவே பணியில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் வந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 4,000 முதல் 5,000 பேர் பள்ளிக் கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முகாம்களில் உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
சங்கோஷ் ஆற்றுக்கு ரெட் அலர்ட்
மேலும், “தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளநீரின் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் இருக்கிறோம். சங்கோஷ் ஆற்றுப் பகுதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் ஆற்றில் வெள்ளநீர் வரக்கூடும். அப்போது இறந்த மீன்கள், பெரிய மரத்துண்டுகள், கான்கிரீட் கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து வரப்படக்கூடும்.
எந்த அவசரநிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றும் மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தைப் போல ஆகிவிடக் கூடாது
மேற்கு வங்க மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மனோஜ் குமார் ஓரான், சங்கோஷ் ஆற்றங்கரையோர மக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். “சங்கோஷ் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக சங்கோஷ் வனக் கிராமம், என்.கே.சி. சங்கோஷ் தேயிலைத் தோட்டம், குமார்கிராம், செங்மாரி, வால்கா பாரோபிஷா, ஜாராகுரி, பக்ரிகுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூடானில் அணை உடைந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அடுத்த 1 முதல் ஒன்றரை மணி நேரத்தில் வெள்ளநீர் கீழ்ப்பகுதிகளுக்கு வரக்கூடும். நேபாளத்தில் ஏற்பட்டதைப் போன்ற பேரழிவு இங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே ஆற்றங்கரையோரத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
டார்ஜிலிங் எம்.பி. எச்சரிக்கை
டார்ஜிலிங் தொகுதி பாஜக எம்.பி. ராஜு பிஸ்டாவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “பூடானின் லெம்தாங் பகுதியில் பனிப்பாறை ஏரி உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மோஃபு ஆறு வழியாக சங்கோஷ் ஆற்றை நோக்கி வருகிறது. எனவே சங்கோஷ் ஆறு மற்றும் அதனுடன் இணையும் துணை ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். டார்ஜிலிங் மலைப்பகுதி, டெராய், டூவர்ஸ் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அசாமிலும் வெள்ள அபாயம்
மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார், கூச் பெஹார், ஜல்பைகுரி, டார்ஜிலிங் பகுதிகளுடன் அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையம், சங்கோஷ் ஆற்றின் நீர்மட்டத்தைக் கண்காணித்து வருகிறது. பூடான் அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வெள்ளநீரின் வேகம், அளவு உள்ளிட்ட தகவல்களைப் பெற்று வருகின்றனர்.
பூடானில் இருந்து வரும் வெள்ளநீரின் வேகம் சற்று குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், அடுத்த சில மணி நேரங்கள் முக்கியமானவை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
