கடந்த ஆண்டு ரத்தன் டாடா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியானது. சிறிய கேக் ஒன்றை வெட்டி அவர் பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அவரின் அருகில் ஒரு இளைஞர் இருந்தார். அந்த இளைஞர்தான் டாடாவுக்கு கடைசி வரை எல்லாமுமாக இருந்தார். ரத்தன் டாடாவின் இறுதி காலக்கட்டத்தில் அவர்தான் உதவியாக இருந்து அவரை பார்த்துக் கொண்டார். அந்த இளைஞரின் பெயர் சாந்தனு. புனேவில் பிறந்த சாந்தனு பொறியியல் பட்டத்துடன் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
சாந்தனு செல்லப் பிராணிகள் மீது அன்பு கொண்டவர். சாலை விபத்துகளில் இருந்து தெரு நாய்களைப் பாதுகாக்க ரிஃப்ளக்டிவ் காலர்களை வடிவமைத்திருந்தார். இரவு நேரங்களில் நாய்கள் குறுக்கே வந்தால், ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்த காலர்களை சாந்தனு வடிவமைத்திருந்தார். ரத்தன் டாடாவும் தெரு நாய்கள் மீது அக்கறை கொண்டவர். நாய்களுக்காக சிறப்பு மருத்துவமனையும் அமைத்தவர். டாடாவின் மும்பை ஹவுஸ் அலுவலகத்தில் நாய்கள் எப்போது வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அந்தளவுக்கு நாய்கள் மீது பிரியம் கொண்டிருந்தார் டாடா.
நாய்கள் மீது பரிவு கொண்ட ரத்தன் டாட்டாவுக்கு சாந்தனு நாயுடு பற்றி ஒரு நியூஸ் லெட்டர் மூலம் தெரியவந்தது. இதுதான் அவரை ரத்தன் டாடாவுக்கு அறிமுகப்படுத்தியது. இருவருக்கும் சந்தித்த போது ஆழமான நட்பு உருவானது. தொடர்ந்து, டாடாவின் அலுவலகத்தில் பொது மேலாளராக பணிபுரியும் வாய்ப்பையும் சாந்தனு பெற்றார். டாடா நிறுவனத்தில் பணி புரியும் இளம் வயது பொது மேலாளர் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் டாடாவின் உதவியாளராக மாறி அவருக்கு வேண்டிய பணிகள் அனைத்தையும் செய்தார்.
டாடாவின் மறைவுக்கு பிறகு,சமூக வலைத் தள பக்கத்தில் ரத்தன் டாடாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சாந்தனு இரங்கல் தெரிவித்திருந்தார். அதில், ரத்தன் டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். அன்பின் விலை துக்கம்தான். சென்றுவாருங்கள், எனது கலங்கரை விளக்கமே!” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, 29 வயதான சாந்தனு goodfellows என்ற ஸ்டார்ட்டப் நிறுவனத்தை 5 கோடி மதிப்பில் தொடங்கியுள்ளார். மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாதான் இதில் முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரயில் விபத்து வழக்குப்பதிவு – லோகோ பைலட்டிடம் விசாரணை!
வார இறுதியிலும் தங்கம் விலை உயர்வா? இன்று சவரன் எவ்வளவு?