மத்திய அரசு தனது பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். when dearness allowance increase
ஆண்டுதோறும் இரண்டு முறை மத்திய மாநில அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான ஆகவிலைபடியை உயர்த்தி கடந்த மார்ச் 28ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவிகிதம் வரை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிபடி என்பது 53 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டதால் அகவிலைப்படி 55 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசின் ஊழியர் ஒருவரின் அடிப்படை ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக இருந்தால், மாதம் 360 ரூபாயாக அகவிலைப்படி கிடைக்கும். அதுவே ஆண்டுக்கு 4,320 ரூபாய் கிடைக்கும்.
மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தின. உத்தரப் பிரதேச மாநில அரசும் தங்கள் ஊழியர்களுக்கு 53 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தியது.
அசாம் மாநில அரசும் இரண்டு சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தியது.
புதுச்சேரி மாநில அரசும் 7ஆவது ஊதிய குழு பரிந்துரையின் பெயரில் 53 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்தது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 22,000 அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த உயர்வு 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 12ஆம் தேதி ஆகும் நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.
மத்திய அரசு தொடங்கி பல்வேறு மாநில அரசுகளும் இரண்டு சதவிகிதம் மட்டுமே இந்த ஆண்டு உயர்த்தியுள்ளதால், தமிழகத்திலும் இரண்டு சதவிகித உயர்வு தான் இருக்குமா அல்லது மூன்று சதவிகிதம் உயர்த்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசித்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. when dearness allowance increase