நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இன்று நீட் தேர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

Medical education and NEET scam

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 2026-27ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் நீட் தேர்வு மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் இந்தத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

ADVERTISEMENT

இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 30 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் சுமார் 5,500 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதில் தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் சென்னையில் மட்டும் 21,000-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் நீட் தேர்வை 7,181 பேர் எழுதுகிறார்கள். இதில் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 298 பேர் அடங்குவர்.

ADVERTISEMENT

கோவை மாவட்டத் தேர்வு மையங்கள்: சூலூர் பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, அவிநாசி சாலை சி.ஜி.டி. கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி, சிவில் ஏரோ பி.எஸ்.ஜி. கல்லூரி, சுங்கம் நிர்மலா கல்லூரி, ஜி.என். மில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மாதிரி பள்ளி, ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, பாரதி பார்க் அவிநாசிலிங்கம் கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி. கல்லூரி, சித்தாபுதூர் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி, புலியகுளம் பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share